$1.1 மில்லியன் மதிப்பிலான மின்சிகரெட் பறிமுதல்; ஆடவர் கைது

$1.1 மில்லியன் மதிப்பிலான மின்சிகரெட் பறிமுதல்; ஆடவர் கைது

2 mins read
894e073c-7d6d-4dc7-8018-3857b0b8aaf3
கிட்டத்தட்ட 67,000 மின்சிகரெட்டுகளும் அது தொடர்பான கருவிகளும் மண்டாயில் உள்ள கிடங்கு ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்டன. - படம்: சுகாதார அறிவியல் ஆணையம்
Google News Preferred Icon

மண்டாயில் உள்ள கிடங்கு ஒன்றில் சுகாதார அறிவியல் ஆணையம் திடீர்ச் சோதனை நடத்தி, 1.1 மில்லியன் வெள்ளிக்கும் மேல் மதிப்புள்ள மின்சிகரெட்டுகளைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, ஆடவர் ஒருவர் பிப்ரவரி 24ஆம் தேதி கைதுசெய்யப்பட்டார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதிக்குப் பிறகு, ஆணையத்தின் ஆகப் பெரிய பறிமுதல் நடவடிக்கை அது. ஏறக்குறைய 67,000 மின்சிகரெட்டுகளும் அது தொடர்பான கருவிகளும் கைப்பற்றப்பட்டதாக ஆணையம் வெள்ளிக்கிழமை (மார்ச் 13) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

கைதுசெய்யப்பட்ட 29 வயது ஆடவர், அந்த வர்த்தகக் கிடங்கிற்குப் பொறுப்பானவர் என்று ஆணையம் கூறியது. உள்ளூரில் விநியோகம் செய்ய, அந்தக் கிடங்கில் பெரிய அளவில் மின்சிகரெட்டுகள் சேகரித்து வைக்கப்பட்டிருந்ததை ஆணையம் கண்டுபிடித்தது.

மின்சிகரெட்டுகளையும் அதன் தொடர்பான கருவிகளையும் இறக்குமதி செய்வதில் ஈடுபட்டிருந்ததாகச் சந்தேகிக்கப்பட்டதால், அவர் கைதுசெய்யப்பட்டார். விசாரணை தொடர்கிறது.

மின்சிகரெட்டுகளையும் அதன் தொடர்பான கருவிகளையும் இறக்குமதி செய்வது, விநியோகிப்பது, விற்பது, விற்க முன்வருவது ஆகிய குற்றங்கள் முதன் முறையாக நிரூபிக்கப்பட்டால், ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனை, $10,000 வரை அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

அந்தக் குற்றங்களை மீண்டும் புரிவோருக்கு 12 மாதங்கள் வரை சிறைத் தண்டனை, $20,000 வரை அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

மின்சிகரெட்டுகளை இறக்குமதி செய்து விநியோகிப்பவர்கள், அவை வைக்கப்படும் இடங்களின் உரிமையாளர்கள் அல்லது குடியிருப்பாளர்கள் ஆகியோருக்கு மேலும் கடுமையான தண்டனை விதிக்கப்படும்.

மின்சிகரெட்டுகளை இறக்குமதிசெய்யும் குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒன்பது ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் $300,000 வரை அபராதமும் விதிக்கப்படும்.

அவற்றை விநியோகிப்பவர்களுக்கு ஆறாண்டுகள் வரை சிறைத் தண்டனையும் $200,000 வரை அபராதமும் விதிக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்
மின்சிகரெட்தண்டனைகைது