$1.3 மில்லியன் மோசடி; 20 பேர் கைது

$1.3 மில்லியன் மோசடி; 20 பேர் கைது

2 mins read
சந்தேகப் பேர்வழிகளில் 15 பேர் ஆண்கள், 5 பேர் பெண்கள்
dabbf09b-d4ba-4066-8315-afbf0a964877
கைது செய்யப்பட்டோர் 19 வயதுக்கும் 49 வயதுக்கும் இடைப்பட்டோர். - படம்: சிங்கப்பூர் காவல்துறை
Google News Preferred Icon

மோசடிக் குற்றங்களில் ஈடுபடுபவர்களைக் குறிவைத்து அமலாக்க நடவடிக்கைகள் நடத்தப்பட்டன. அதில் சந்தேகத்தின்பேரில் 20 பேர் கைது செய்யப்பட்டனர்

சந்தேகப் பேர்வழிகளின் மோசடிச் செயல்களால் 1.3 மில்லியன் வெள்ளிக்கு அதிகமான இழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்று காவல்துறை ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 12) தெரிவித்தது.

கைது செய்யப்பட்டோர் 19 வயதுக்கும் 49 வயதுக்கும் இடைப்பட்டோர். விசாரிக்கப்படும் சந்தேகப் பேர்வழிகளில் 15 பேர் ஆண்கள், 5 பேர் பெண்கள்.

வேலை, இணைய வணிகம், அரசாங்க ஊழியர்போல் நடிப்பது, முதலீடு போன்ற மோசடிகளில் சந்தேகப் பேர்வழிகளுக்குத் தொடர்பிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்கள்மீது ஏப்ரல் 13 முதல் 17 வரை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும். அவர்கள்மீது மோசடிக்கு உடந்தையாக இருந்தது, சட்டவிரோதச் செயலுக்குத் துணையாக இருந்து பலன் பெற்றது, சட்டவிரோதமாகக் கணினிகளைப் பயன்படுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும்.

முதற்கட்ட விசாரணையில் சந்தேகப் பேர்வழிகள் மோசடிச் செயல்களுக்காகத் தங்களுடைய வங்கிக் கணக்கு விவரங்களைக் குற்றக் கும்பல்களிடம் கொடுத்தது தெரியவந்தது. அதன் மூலம் கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றும் நடவடிக்கைகளும் நடந்துள்ளன.

சந்தேகப் பேர்வழிகள் சிலர் வங்கிகளை ஏமாற்றி இணையப் பணப்பரிமாற்றத்திற்கான சேவைகளைப் பெற்று மோசடிக் கும்பலிடம் கொடுத்துள்ளனர்.

மோசடிக் குற்றங்களுக்கு உதவியவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையோ அபராதமோ அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

மோசடிக் கும்பல்களுக்குத் துணைபுரிவோர்க்கு ஆறு முதல் 24 பிரம்படிகளும் விதிக்கப்படும்.

பொதுமக்கள் மோசடி தொடர்பான தகவல்களை 1800-255-0000 என்ற காவல்துறையின் தொலைபேசி எண்ணுக்குத் தெரிவிக்கலாம்.

www.police.gov.sg/i-witness என்ற மின்னஞ்சல் வழியாகவும் காவல்துறையை அணுகலாம்.

சில நாள்களுக்கு முன்னர் காவல்துறை அதிகாரிகள் $3.9 மில்லியன் மோசடி தொடர்பாக 251 பேரிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் 665க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகளுடன் தொடர்புடையவர்களாக இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்