மத்திய சேமநிதிக் கழகம் கிட்டத்தட்ட 1.4 மில்லியன் சிறப்புக் கணக்குகளை ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 19) மூடியது.
55 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களின் மத்திய சேம நிதியின் சிறப்புக் கணக்குகள் மூடப்பட்டதாக கழகம் தனது அறிக்கையில் தெரிவித்தது.
சிறப்புக் கணக்குகள் மூடப்படுவது குறித்து 2024 வரவுசெலவுத் திட்ட உரையில் பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங் தெரிவித்திருந்தார்.
அதன்பின்னர் மத்திய சேமநிதி (திருத்த) மசோதா நாடாளுமன்றத்தில் அக்டோபர் 14ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் 55 வயதை எட்டும் நபர்களுக்கு மத்திய சேம நிதியில் சாதாரண கணக்கும் ஓய்வுக்கால கணக்கும் மட்டுமே இருக்கும்.
வட்டி விகிதம் குறித்து ஆண்டின் ஒவ்வொரு காலாண்டிலும் மறுபரிசீலனை செய்யப்படும்.
சிறப்புக் கணக்கில் உள்ள நிதி, ஓய்வுக்கால கணக்கிற்கு உறுப்பினர்களின் முழு ஓய்வுக்காலத் தொகை வரை மாற்றப்படும். ஓய்வுக்கால கணக்குகளில் உள்ள நிதிக்கு நீண்டகால அடிப்படையில் வட்டி விகிதம் வழங்கப்படும். தற்போது அது 4 விழுக்காடாக உள்ளது.
சிறப்புக் கணக்கில் எஞ்சியிருக்கும் நிதி, சாதாரண கணக்கிற்கு மாற்றப்படும். அதற்கு 2.5 விழுக்காடு வட்டி வழங்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
உறுப்பினர்களுக்கு அவர்களது சிறப்புக் கணக்கு மூடப்படுவது குறித்து கடிதம், மின்னஞ்சல் அல்லது குறுஞ்செய்தி மூலம் அறிவிக்கப்படும்.
மேலும், தேவைக்கேற்ப சாதாரண கணக்கில் உள்ள நிதியை உறுப்பினர்கள் பயன்படுத்திக்கொள்ள ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.
மத்திய சேமநிதி குறித்த மேல்விவரங்களுக்கு கழகத்தின் இணையப்பக்கத்தை நாடலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

