சிங்கப்பூரின் வர்த்தக உலகத்தை ஆட்டம் காணவைத்த $1.46 பில்லியன் நிக்கல் முதலீடு மோசடி திட்டத்தில் கிட்டத்தட்ட 947 பேர் முதலீடு செய்து தங்கள் பணத்தை இழந்ததாக அரசுத் தரப்பு தெரிவித்தது.
நவம்பர் 27ஆம் தேதி இந்த மோசடி திட்டத்தின் மூளையாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் இங் யு ஸிக்கு எதிராக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
‘என்வி அசெட் மேனேஜ்மென்ட்’ எனும் சொத்துக்களை நிர்வகிக்கும் நிறுவனத்திலும் ‘என்வி குளோபல் டிரேடிங்’ எனும் வர்த்தக நிறுவனத்திலும் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என முதலீட்டாளர்களுக்கு ஆசை வார்த்தை கூறி அவர்களை நம்பவைத்து இங் ஏமாற்றியதாக அரசுத் தரப்பு துணை வழக்கறிஞர் கார்டன் ஓ உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
உண்மையில், இவ்விரு நிறுவனங்களும் இங்கின் கற்பனை நிறுவனங்கள். ஆஸ்திரேலியாவில் இருக்கும் சுரங்கம் ஒன்றிலிருந்து நிக்கல் உலோகத்தைத் தள்ளுபடி விலைக்கு வாங்கி, அதை இங்கு கணிசமான லாபத்திற்கு விற்கலாம் எனப் பொய்யுரைத்து முதலீட்டாளர்களைக் கற்பனை நிறுவனங்களில் முதலீடு செய்யவைத்ததாக இங்மீது திரு கார்டன் குற்றஞ்சாட்டினார்.
அந்த உலோகத்தை இந்த நிறுவனங்கள் வாங்கவும் இல்லை விற்கவும் இல்லை. இங்கின் கற்பனை நிறுவனங்களில் முதலில் முதலீடு செய்தவர்களுக்கு மற்ற முதலீட்டாளர்கள் அளித்த நிதியை வைத்து லாபத்தை இங் வழங்கியதாகக் கூறப்பட்டது.
அவரது இரு நிறுவனங்களின் பேரில் செலுத்தப்பட்ட $1.46 பில்லியன் பணத்தில், 481 மில்லியனுக்கும் அதிகமான தொகை இங்கின் தனிப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்பட்டதாகத் திரு கார்டன் சொன்னார்.
அரசுத் தரப்பின் வாதங்கள் தொடர்ந்தன.

