அரசாங்க ஊழியர்களுக்கு 1.55 மாத ஆண்டிறுதி போனஸ்

அரசாங்க ஊழியர்களுக்கு 1.55 மாத ஆண்டிறுதி போனஸ்

இளநிலை அதிகாரிகள் கூடுதலாக $600 வரை பெறுவர்.
கோப்புப் படம்: பிஸினஸ் டைம்ஸ்

25 Nov 2026 - 5:57 pm

2 mins read

அரசாங்க ஊழியர்களுக்கு 1.55 மாதச் சம்பளம், வருடாந்தர மாறுவிகிதத் தொகையாக வழங்கப்படும் என்று பொதுச் சேவைப் பிரிவு புதன்கிழமை (நவம்பர் 25) அறிவித்துள்ளது.

அத்துடன், எம்எக்ஸ்13(1) (MX13(I)), எம்எக்ஸ்14 (MX14) ஆகியவற்றுக்கு நிகரான நிலைகளில் உள்ள அரசாங்க ஊழியர்களுக்குக் கூடுதலாக ஒருமுறைத் தொகையாக 300 வெள்ளியும், எம்எக்ஸ்15 (MX15), எம்எக்ஸ்16 (MX16) ஆகிய தரநிலைகள் மற்றும் செயலாக்க ஆதரவுத் திட்டத்தின்கீழ் (OSS) உள்ள ஊழியர்களுக்கு 600 வெள்ளியும் வழங்கப்படும்.

சிங்கப்பூரின் மேம்படுத்தப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி முன்னுரைப்பைக் கருத்திற்கொண்டு இந்த ஆண்டிறுதி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்பார்த்ததைவிட வலுவான பொருளியல் செயல்பாட்டைக் கருத்திற்கொண்டு, சம்பள உயர்வுக்கு ஆக்கபூர்வமான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க ஊக்குவிக்கும் தேசியச் சம்பள மன்றத்தின் 2026/2027ஆம் ஆண்டிற்கான வழிகாட்டுதல்களும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன.

அத்துடன், அரசாங்க ஊழியர்கள் அனைவருக்கும் ஒரு மாதச் சம்பளத்தை ஓய்வூதியம் சாரா ஆண்டுப் படித்தொகையாக (NPAA) அரசாங்கம் தொடர்ந்து வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

1.55 மாத போனஸ் குறித்து பொதுத்துறை தொழிற்சங்கங்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டது. மேலும், குறைந்த வருமான ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தும் தேசியச் சம்பள மன்றத்தின் பரிந்துரைக்கேற்ப இளநிலை அதிகாரிகளுக்குக் கூடுதல் கொடுப்பனவு வழங்கப்படுகிறது என்று பொதுச் சேவைப் பிரிவு தெரிவித்தது.

வாழ்க்கைச் செலவின உயர்வுக்கு மத்தியில், இந்த ஆதரவு ஊழியர்களுக்குப் பேருதவியாக இருக்கும் என்று தேசியத் தொழிற்சங்கக் காங்கிரசின் துணைத் தலைமைச் செயலாளர் சாம் ஹுய் ஃபோங் தெரிவித்தார்.

செயற்கை நுண்ணறிவு, மின்னிலக்க மாற்றங்களுக்கு ஏற்ப ஊழியர்கள் புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுத் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஆண்டு முழுவதும் அரசாங்க ஊழியர்கள் ஆற்றிய கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, பங்களிப்புகளுக்கு இந்த இரண்டு மாத மொத்தத் தொகை, அர்த்தமுள்ள அங்கீகாரம் என்று பொதுத் துறை சங்கங்களும் பொதுத் துறை ஊழியருக்கான ஒருங்கிணைந்த சங்கமும் குறிப்பிட்டன.

உலகளாவிய சமூக-அரசியல் பதற்றங்கள், நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில், சிங்கப்பூருக்குச் சேவையாற்ற நமது அரசாங்க ஊழியர்கள் கடுமையாக உழைத்துள்ளனர் என்று பொதுத் துறை ஊழியருக்கான ஒருங்கிணைந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் சஞ்சீவ் குமார் திவாரி குறிப்பிட்டார்.

அரசாங்க ஊழியர்களின் பங்களிப்புகள் நியாயமாக அங்கீகரிக்கப்படுவதை உறுதிசெய்யவும், திறன் மேம்பாட்டின் மூலம் அவர்கள் காலத்திற்கேற்பத் தங்களைத் தயார்படுத்திக்கொள்ளவும் சங்கம் அரசாங்கத்துடன்தொடர்ந்து இணைந்து பணியாற்றும் என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்போனஸ்ஊக்கத்தொகைசம்பளம்அரசாங்கம்