தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

$1.6 மில்லியன் இழப்பு: மோசடிக் குற்றங்களுக்காக 17 பேர் கைது

2 mins read
95fc7a68-e2a3-4b67-a9f9-19ed53942748
சந்தேகப் பேர்வழி ஒருவர் ஏடிஎம் இயந்திரங்களில் பல கணக்குகளிலிருந்து குற்றக் கும்பலுக்கு உதவியாகப் பணத்தை எடுத்துக்கொடுத்துள்ளார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பலவித மோசடிகளில் ஈடுபட்ட 17 சந்தேக நபர்கள்மீது இவ்வாரம் நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்படும்.

அவர்கள் சம்பந்தப்பட்ட மோசடிகளால் $1.6 மில்லியனுக்கும் மேற்பட்ட தொகை இழக்கப்பட்டுள்ளது. இதனை காவல்துறை ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 2) வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தது.

கைது செய்யப்பட்டவர்களில் 14 ஆண்களும் மூன்று பெண்களும் அடங்குவர். அவர்கள் 17 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள். அரசாங்க அதிகாரிபோல் ஆள்மாறாட்டம், வேலை வாய்ப்பு, மின்வணிகம், போலியாக பொருள்கள் வாங்குதல், தீங்குநிரல் பயன்படுத்தி தூண்டுகளவு (Phishing) போன்ற பலவகை மோசடிகளில் அவர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர்.

ஆரம்பக்கட்ட விசாரணையில், வங்கிக் கணக்குகளையும் சிங்பாஸ் மறைச்சொற்களையும் அவர்கள் விற்றதாக அறியப்படுகிறது. அதன் விளைவால் குற்றக்கும்பல்கள் மோசடியால் ஏமாற்றிப் பெற்ற பணம் வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றிவிடப்பட்டுள்ளது.

ஒருசிலர், வங்கிகளிடம் பொய்யுரைத்து புது கணக்குகளைத் திறந்துள்ளனர். பிறகு அக்கணக்குகளின் இணையப் பரிவர்த்தனை விவரங்களை அடையாளம் தெரியாதோரிடம் அவர்கள் வழங்கியுள்ளனர். ஒரு சந்தேக நபர், ஏடிஎம் இயந்திரங்களில் பல கணக்குகளிலிருந்து குற்றக்கும்பலுக்கு உதவியாக பணத்தை எடுத்துக் கொடுத்துள்ளார்.

மோசடிப் பணத்தை கையாண்ட குற்றங்களுக்காக நவம்பர் 3, 7 தேதிகளில் சந்தேக நபர்கள்மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும்.

ஏமாற்றியது, குற்றச்செயல்கள் வழியாக மற்றொருவர் பயனடைய உதவியது, அதிகாரபூர்வமற்ற முறையில் கணினி விவரங்களைப் பெற உடந்தையாக இருந்தது, மறைச்சொற்களையும் கடவுக்குறிகளையும் சட்டத்துக்குப் புறம்பாக வெளியிட்டது போன்ற பல குற்றச்செயல்கள் அவற்றில் அடங்கும் என்று காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

மோசடிக் குற்றங்களுக்கு சட்டப்படி சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படுகின்றன. அவற்றோடு வங்கிச் சேவைகள், மின்வணிகம், ஏடிஎம் வசதிகளை பயன்படுத்த தடையும் விதிக்கப்படும்.

இவ்வாண்டின் முதற்பாதியில் மோசடி தொடர்பில் சிங்கப்பூரில் 20,000 புகார்கள் செய்யப்பட்டுள்ளன. அவற்றால் அரை பில்லியன் வெள்ளிக்குமேல் பலர் ஏமாற்றப்பட்டுள்ளனர். பாதிப்படைந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோரில் ஒவ்வொருவரும் தலா $100,000 இழந்துள்ளனர் என்று காவல்துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்