$1.79 மில்லியன் வங்கி மோசடி: குற்றத்திலிருந்து விடுவிக்கப்பட்ட ஆடவர்

1 mins read
87c079b4-17aa-4195-9465-7bb644e54965
குற்றத்திலிருந்து விடுவிக்கப்பட்ட காக் சியூ லியோங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வீட்டுக் கடன் மோசடி தொடர்பாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஆடவர் தற்போது அந்தக் குற்றங்களிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

காக் சியூ லியோங் என்னும் அந்த 52 வயது ஆடவர் இனி இந்த வழக்கில் மீண்டும் குற்றஞ்சாட்டப்படமாட்டார்.

சியூ போலவே கடந்த நவம்பர் மாதம் 55 வயது பிஜாபகுதூர் ராய் ஸ்ரீ கந்தராயும் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

சியூ, பிஜாபகுதூர் மற்றும் மூவர் இணைந்து வங்கியில் 5.1 மில்லியன் வெள்ளிக்கு அதிகமாக வீட்டுக் கடன் வாங்கியுள்ளனர்.

2014ஆம் ஆண்டுக்கும் 2015ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் பிஜாபகுதூர், இரண்டு சொத்துகளை வைத்து மோசடி நடவடிக்கையைத் தொடங்கியதாக இதற்கு முன்னர் வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் வங்கிக்கு 1.79 மில்லியன் வெள்ளி இழப்பு ஏற்பட்டது.

இந்த மோசடியை உணர்ந்த அதிகாரிகள், பிஜாபகுதூர்மீது வழக்குப் பதிவு செய்தனர்.

அதன்பின்னர் நடந்த விசாரணையில் பிஜாபகுதூர் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதற்காக அவருக்குக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7½ ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அதேபோல் பிஜாபகுதூருக்கு உதவியாக இருந்த சியூவிற்கு 4½ ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

தீர்ப்பை எதிர்த்துப் பிஜாபகுதூரும் சியூவும் மேல்முறையீடு செய்தனர். கடந்த ஏப்ரல் மாதம் சியூவின் மேல்முறையீட்டை நீதிமன்றம் நிராகரித்தது.

இந்நிலையில் சியூமீது அரசாங்கத் தரப்பு தொடர்ந்த குற்றச்சாட்டைத் திரும்பப்பெற்றது. இதனால் அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்