மோசடிக்கு எதிராக நடவடிக்கை: $1.9 மில்லியன் பறிமுதல், ஒன்பது பேர் கைது

2 mins read
f844e5fb-2b8b-4449-82f8-7c9876bcbe8c
மோசடியில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில் 18 வயதுக்கும் 33 வயதுக்கும் இடைப்பட்ட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். - படம்: சிங்கப்பூர் காவல்துறை

மோசடிக்கு எதிரான காவல்துறை பிரிவு கிட்டத்தட்ட ஒருமாதமாக மேற்கொண்ட நடவடிக்கைகளில் $1.9 மில்லியன் கைப்பற்றப்பட்டுள்ளது. மோசடிகளில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அதிகாரிகள் போல் நடித்து ஏமாற்றியது, முதலீடு தொடர்பான மோசடி, வேலை வாங்கித் தருவதாகக் கூறும் மோசடி போன்றவற்றில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் அந்த ஒன்பது பேர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

ஏப்ரல் 15லிருந்து மே மாதம் 13ஆம் தேதிவரை மேற்கொள்ளப்பட்ட காவல்துறை நடவடிக்கையில், 400 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளில் காவல்துறையின் மோசடிகளுக்கு எதிரான பிரிவு, மற்ற காவல்துறைப் பிரிவுகள், நடவடிக்கையில் பங்குகொண்ட வங்கிகள் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டதாக காவல்துறை வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை விளக்கியது.

இதன் தொடர்பில், மோசடிக்காரர்களின் நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் தங்கள் வங்கிக் கணக்குகளை தந்து உதவியவர்களைத் தேடும் பணியில் காவல்துறை சிங்கப்பூர் முழுவதும் அதிரடிச் சோதனைகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிரடி சோதனைகளுக்குப் பின் ஏழு ஆடவர்கள், இரண்டு பெண்கள் என மொத்தம் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் 18லிருந்து 33 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மேலும், 33 பேர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர் என்றும் சொல்லப்படுகிறது.

மேற்கூறிய 42 பேரும் 200க்கும் மேற்பட்ட மோசடிக் குற்றங்களில் ஈடுபட்டிருப்பதாக நம்பப்படுகிறது.

இவற்றுடன், காவல்துறையினர் 900க்கும் மேற்பட்ட இணையச் சேவைகளை முடக்கி, 806க்கும் அதிகமான தொலைபேசி சேவைகளைச் செயலிழக்கச் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மோசடிகள் தொடர்பில் காவல்துறை விசாரணை தொடர்கிறது.

குற்றச்செயல்களில் கிடைக்கும் ஆதாயத்தை வைத்திருக்க உதவுபவர்கள் அல்லது வைத்திருக்கும் மற்றவர்களுக்கு உதவுவோருக்கு மூன்றாண்டுகள் வரை சிறைத்தண்டனை, $50,00 வரையிலான அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்