$1 மில்லியன் பாராமரிப்புத் தொகை: மரபணுச் சோதனை கோரிய பெண்ணின் மனு தள்ளுபடி

$1 மில்லியன் பாராமரிப்புத் தொகை: மரபணுச் சோதனை கோரிய பெண்ணின் மனு தள்ளுபடி

2 mins read
b2203613-c1c6-4da8-909d-a01724f5fbca
வழக்கு தொடுத்த பெண்ணின் வாக்குமூலங்களில் நம்பகத்தன்மை இல்லை என்று நீதிபதி குறிப்பிட்டார். - படம்: பிக்சாபே
Google News Preferred Icon

தமது குழந்தையின் தந்தை எனத் தான் குறிப்பிடும் நபரிடமிருந்து $1 மில்லியன் பாராமரிப்புத் தொகையைக் கோரும் முயற்சியில், நீதிமன்ற உத்தரவு மூலம் மரபணுச் சோதனை நடத்த வேண்டும் என்ற பெண்ணின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

ஜூலை 30ஆம் தேதியன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், குடும்ப நீதிமன்றத்துக்கு மரபணுச் சோதனைக்கு உத்தரவிடும் அதிகாரம் இருந்தாலும், ஒருவரின் நியாயமான அந்தரங்க உரிமையைக் கருத்தில் கொண்டு இந்த அதிகாரம் மிகவும் கவனமாகவே பயன்படுத்தப்பட வேண்டும் என்று மாவட்ட நீதிபதி பாங் சியாவ் சுங் சுட்டிக்காட்டினார்.

மேலும், இந்த வழக்கில் அத்தகைய உத்தரவைப் பெறுவதற்குப் போதுமான ஆதாரங்களை அந்தப் பெண் சமர்ப்பிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். இருவருக்கும் இடையே பழக்கம் இருப்பதோ அல்லது பாலியல் உறவு கொண்டிருப்பதோ மட்டும் இதற்குப் போதாது என்று கூறிய நீதிபதி, கர்ப்பம் தரித்ததாகக் கூறப்படும் காலத்தில் இருவரும் பாலியல் உறவு கொண்டனர் என்பதை நீதிமன்றம் முதலில் உறுதிசெய்துகொள்ள வேண்டும் என்றார்.

2014ஆம் ஆண்டு மே மாதம் பிறந்த குழந்தைக்கு, அப்பெண்ணின் அப்போதைய கணவரே பிறப்புச் சான்றிதழில் தந்தையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளார். 2020ஆம் ஆண்டு விவாகரத்து பெற்ற பிறகு, குழந்தையின் உண்மையான தந்தை எனக் குறிப்பிடப்படும் ஆடவரிடமிருந்து மாதம் $8,926 அல்லது மொத்தமாக $1.07 மில்லியன் பாராமரிப்புத் தொகை பெற அப்பெண் நீதிமன்றத்தை நாடினார்.

ஆனால், சம்பந்தப்பட்ட ஆடவர் தாம் அப்பெண்ணுடன் எவ்வித உறவிலும் இல்லை என்றும் கர்ப்பம் தரித்ததாகக் கூறப்படும் காலகட்டத்தில் தாம் தந்தையாக இருக்க வாய்ப்பில்லை என்றும் கூறி இந்தக் குற்றச்சாட்டை மறுத்தார்.

அப்பெண்ணின் வாக்குமூலங்களில் நம்பகத்தன்மை இல்லை எனக் குறிப்பிட்ட நீதிபதி, அவரது மனுவைத் தள்ளுபடி செய்து, பிரதிவாதிக்கு வழக்குச் செலவாக $1,800 வழங்குமாறு உத்தரவிட்டார். இத்தீர்ப்பை எதிர்த்து அப்பெண் மேல்முறையீடு செய்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்