‘ஸிக்’ மூலம் டாக்சி ஓட்டுநர்களின் பிள்ளைகளுக்காக $1 மில்லியன் கல்வி நிதி

‘ஸிக்’ மூலம் டாக்சி ஓட்டுநர்களின் பிள்ளைகளுக்காக $1 மில்லியன் கல்வி நிதி

2 mins read
a15b87fd-8ea9-45d5-87b6-5c8d07377002
இந்தப் புதிய கல்வி ஆதரவு நிதி, ஸிக் நிறுவனம் வழங்கியுள்ள $25 மில்லியன் கடப்பாட்டின் ஒரு பகுதியாகும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கம்ஃபர்ட்டெல்குரோவின் ‘ஸிக்’ நிறுவனம், தனது நீண்டகால கல்விச் சாதனை விருதுகளை ஒரு புதிய கல்வி ஆதரவு நிதியாக விரிவுபடுத்தியுள்ளது. இதன் மூலம், டாக்சி ஓட்டுநர்களின் பிள்ளைகளின் ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை ஆதரவளிக்க ஐந்தாண்டுகளில் $1 மில்லியன் நிதியை ஒதுக்கியுள்ளது.

அந்நிறுவனம் வெள்ளிக்கிழமை (ஜூன் 26) நடைபெற்ற முதலாவது விருது வழங்கும் விழாவில் இதனை அறிவித்தது. இந்த விழாவில், தற்காலிக போக்குவரத்து அமைச்சரும், நிதிக்கான மூத்த துணை அமைச்சருமான ஜெஃப்ரி சியாவ் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில், டாக்சி ஓட்டுநர்கள் பிள்ளைகளின் கல்விச் சாதனைகளைப் பாராட்டும் விதமாக, அவர்களுக்கு $200,000 வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு உதவித்தொகை பெறுபவர்களில், 30 ஆண்டுகளாக ஸிக் நிறுவனத்தின் ஓட்டுநர் பங்காளியாக இருக்கும் சியோவ் யூ லீயும் அவரது மூன்று பிள்ளைகளும் அடங்குவர்.

இத்தகைய ஆதரவு தனது குடும்பத்திற்கு ஒரு பெரும் நிம்மதியை அளிக்கிறது என்று சியோவ் கூறினார். இது “என் பிள்ளைகளின் பள்ளிக் கட்டணங்களுக்கு உதவுகிறது. என் மீதான நிதிச் சுமைகளைக் குறைக்கிறது. மேலும் அவர்கள் தங்கள் படிப்பில் கவனம் செலுத்த வழி வகுக்கிறது,” என்றும் அவர் கூறினார்.

அவரது மூத்த மகன், சியோவ் யி சின், பலதுறைத் தொழிற்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவர். மேலும் நிதித்துறையில் ஒரு தொழிலைத் தொடர அவர் விரும்புகிறார்.

“எங்கள் ஓட்டுநர்கள் எங்கள் வர்த்தகத்தின் முதுகெலும்பாக உள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவளிப்பது, ஓட்டுநர் சமூகத்தை நாங்கள் கவனித்துக்கொள்ளும் விதத்தின் மையமாகும். கல்வி ஆதரவு நிதி மூலம், பிள்ளைகளை வளர்க்கவும், கல்வி கற்பிப்பதில் உள்ள அழுத்தங்களைக் குறைக்கவும், அடுத்த தலைமுறையினர் தங்கள் இலக்குகளை நம்பிக்கையுடன் தொடர அதிகாரம் அளிக்கவும் நாங்கள் விரும்புகிறோம்,” என்று சிங்கப்பூர் பாயிண்ட்-டு-பாயிண்ட் மொபிலிட்டி வர்த்தகத்தின் தலைவர் மைக்கல் ஹுவாங் கூறினார்.

இந்தப் புதிய கல்வி ஆதரவு நிதி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஓட்டுநர் நலத் திட்டங்களுக்கு ஆதரவளிப்பதற்காக ஸிக் நிறுவனம் வழங்கியுள்ள $25 மில்லியன் கடப்பாட்டின் ஒரு பகுதியாகும்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

இவற்றில் ஓட்டுநர் நல முன்னெடுப்புகள், வாடகை ஆதரவு, மருத்துவ மற்றும் காப்பீட்டுப் பலன்கள், பயிற்சி, திறன் மேம்பாட்டு வாய்ப்புகள் மற்றும் பிற நலத்திட்டங்கள் ஆகியவை அடங்கும்.

குறிப்புச் சொற்கள்
டாக்சிபொதுப் போக்குவரத்துஉதவித்தொகை