சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம், தீவு முழுவதும் நடத்திய திடீர்ச் சோதனை நடவடிக்கைகளில், ஒரு மில்லியன் வெள்ளிக்கும் மேல் மதிப்புள்ள 179 ஆடம்பரக் கைக்கடிகாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதன் தொடர்பில், 56 வயது மாது கைதுசெய்யப்பட்டார்.
அந்த மாது போலிக் கொள்முதல்களை உருவாக்கி, பரிவர்த்தனைகளின் மதிப்பைக் கூட்டி, பொய்யான பொருள், சேவை வரிக் கோரிக்கைகளுக்காகப் போலியான வரிக் கட்டணப் பட்டியல்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
மற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட ஏழு பேர் விசாரணைகளில் உதவிவருவதாக ஆணையம் வியாழக்கிழமை (மார்ச் 19) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
அந்தச் சம்பவங்களுடன் தொடர்புடைய கணக்குப் பதிவேடுகள், மின்னணுச் சாதனங்கள், மற்ற ஆதாரங்கள் ஆகியவற்றை ஆணையம் பறிமுதல் செய்தது.
பணத்தைத் திரும்பப் பெறுவதன் தொடர்பில், 20க்கும் மேற்பட்ட வர்த்தக இடங்களிலும் குடியிருப்புப் பகுதிகளிலும் ஆணையத்தின் வரிப் புலனாய்வாளர்கள் திடீர்ச் சோதனைகளை நடத்தினர். சில சந்தேகத்துக்குரிய மோசடிச் சம்பவங்கள் குறித்த விசாரணைகளின் ஒரு பகுதியாக அந்தச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
தளவாடம், ஒட்டுமொத்த விற்பனை உள்ளிட்ட வெவ்வேறு துறைகளில் உள்ள தொழில்கள், பொருள், சேவை வரி தொடர்பான தனிப்பட்ட மோசடிச் சம்பவங்களில் அடையாளம் காணப்பட்டதை முதற்கட்ட விசாரணைகள் காட்டியதாக ஆணையம் கூறியது.
பொய்யான பொருள், சேவை வரியைத் திரும்பப் பெறும் மோசடிக் கோரிக்கைகளுக்கு ஆதரவாக, செயல்படாமல் இருக்கும் நிறுவனங்கள் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் சம்பவங்களும் அவற்றில் அடங்கும்.
தொடர்புடைய செய்திகள்
அரசாங்கத்தை ஏமாற்ற முயற்சி செய்யும் தொழில்களுக்கும் தனிநபர்களுக்கும் எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக ஆணையம் கூறியது.
கடந்த ஆண்டு, பொருள், சேவை வரியைத் திரும்பப் பெறுவதற்கான கோரிக்கைகளைச் சமர்ப்பித்த 1,300க்கும் அதிகமான தொழில்கள் தணிக்கை செய்யப்பட்டன. அப்போது, ஆணையம் வெவ்வேறு வகையான விதிமீறல்களைக் கண்டுபிடித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

