சிங்கப்பூரில் பாலர் பருவத்தில் இருக்கும் இரண்டில் ஒரு பிள்ளை, பாலர் பள்ளிக்குள் நுழையும் வயதில் பற்சிதைவுப் பிரச்சினையால் பாதிக்கப்படுவதாக சிங்கப்பூர் தேசிய பல் சிகிச்சை நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும், அண்மைய ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் 2009ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின்படி அக்காலத்தில் பாலர் பருவத்தில் இருந்த ஐந்தில் இரு பிள்ளைகளுக்கு இந்தப் பிரச்சினை இருந்ததாகவும் அது கூறியுள்ளது.
“பிள்ளைகளின் பற்களில் அதிகமான துவாரங்கள் இருக்கும்போது, தங்கள் பற்களை நன்றாக துலக்குவதில் அவர்களுக்குப் பிரச்சினைகள் இருக்கலாம். இதன் விளைவாக பல்லிடுக்கில் உணவு சிக்கிக்கொண்டு, பற்சிதைவை மோசமாக்கும்.
“இதற்குச் சிகிச்சை அளிக்கப்படவில்லை எனில் பாதிக்கப்பட்ட பற்களில் வலி, வீக்கம், வாய் துர்நாற்றம் போன்றவை ஏற்படலாம்,” என்று சிங்கப்பூர் தேசிய பல் சிகிச்சை நிலையத்தில் பிள்ளைகளுக்கான பல் மருத்துவப் பிரிவின் தலைவர் டாக்டர் பியென் லாய் கூறினார்.
“பற்களில் ஏற்படும் வலி காரணமாகப் பிள்ளைகள் பள்ளி நாள்களைத் தவறவிடுவதோடு பல் சிகிச்சைக்குச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படலாம். மேலும், பிள்ளைகளின் வளர்ச்சி, தூக்கம் ஆகியவற்றையும் இது பாதிக்கலாம்,” என்றார் அவர்.
இதுபோன்ற பாதிப்புகளைத் தடுப்பதற்காகப் பிள்ளைகளுக்கான வாய்சார்ந்த சுகாதாரத் திட்டம் இவ்வாண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது. பாலர் பருவப் பிள்ளைகளுக்கு ஏற்படும் பற்சிதைவுப் பிரச்சினைகளைப் பெரும்பாலும் தடுக்க முடியும் என்பதைப் பெற்றோர்கள் புரிந்துகொள்ள இத்திட்டம் உதவுவதாகக் கூறப்படுகிறது.
இதன்மூலம் கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட பிள்ளைகள் பயனடைந்துள்ளனர்.
பற்சிதைவு ஏற்படக் காரணம்
சர்க்கரை நிறைந்திருக்கும் திண்பண்டங்கள், பானங்கள் ஆகியவற்றை பிள்ளைகள் அளவுக்கு மீறி உட்கொள்ளும்போது அவர்களுக்குப் பற்சிதைவு ஏற்படுகிறது. மேலும், பெற்றோர்கள் பிள்ளைகளை வாயில் பால் புட்டிகளோடு உறங்க வைப்பதால் பால் பற்களில் ஒட்டிக்கொள்ளும். இது பற்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும்.
தொடர்புடைய செய்திகள்
பிள்ளைகள் உட்கொள்ளும் பாலில் இருக்கும் சர்க்கரை அளவு, பால் புட்டிகளை அவர்கள் வாயில் வைத்திருக்கும் கால அளவு ஆகியவைதான் பிள்ளைகளுக்குப் பற்சிதைவை ஏற்படுத்துகின்றன.
பெற்றோர்களுக்குப் பாலர் பருவத்தில் இருக்கும் பிள்ளைகளின் பற்களின்மீது அக்கறை இல்லாததும் இதற்கு ஒரு காரணம் என்கிறார் டாக்டர் பியென் லாய்.
பெரும்பாலும், தங்கள் குழந்தையின் நல்வாழ்வு, உடல் வளர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்தும் பெற்றோர், அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அம்சமான வாய்சார்ந்த சுகாதாரத்தைக் கவனிக்கத் தவறுவதாகவும் அவர் சுட்டினார்.
குறிப்பாக, “பாலர் பருவப் பிள்ளைகளுக்கு ஏற்படும் தற்காலிக பிரச்சினைகளில் ஒன்றாக பற்சிதைவு பார்க்கப்படுகிறது.
“எல்லாவற்றிற்கும் மேலாக, பால் அருந்தும் பருவத்தில் இருக்கும் பற்கள்தானே விழுந்து வேறு பற்கள் முளைக்கப்போவதால் நாம் ஏன் அவற்றைப் பராமரிக்க வேண்டும்,” எனப் பெற்றோர்கள் எண்ணுவதாக அவர் விவரித்தார்.
தடுக்கும் முறை
“பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குப் பால் அருந்தும் பருவத்தில் பற்கள் முளைக்கும்முன்பே வாய்சார்ந்த சுகாதாரத்தைப் பராமரிக்கும் பழக்கங்களைத் தொடங்க வேண்டும். பிள்ளைகள் ஆறு முதல் 12 மாதங்கள் வரை இருக்கும்போது பல் மருத்துவரிடம் பரிசோதனைக்காக அழைத்துச் செல்ல வேண்டும்,” என்றார் டாக்டர் பியென் லாய்.
இதன்மூலம், பிள்ளைகளுக்குப் பற்களில் ஏற்படவிருக்கும் பிரச்சினைகளை முன்கூட்டியே அறிந்து அதைத் தடுக்க முடியும் எனவும் அவர் கூறினார்.


