சுவா சூ காங்கில் உள்ள பொதுப் பயனீட்டுக் கழக நீர்நிலையத்தில் வழக்கமான சுத்திகரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது நச்சுவாயுவைச் சுவாசித்த 40 வயது இந்திய நாட்டு ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.
மேலும், 24 மற்றும் 39 வயதுடைய மலேசிய ஆடவர் இருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் வியாழக்கிழமை (மே 23) காலை 11.15 மணிவாக்கில் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
நச்சுவாயுவைச் சுவாசித்த மூவரும் சுயநினைவு இழந்து மயக்கமுற்றனர். அதனைத் தொடர்ந்து, அம்மூவரும் இங் டெங் ஃபோங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அவர்கள் ஹைட்ரஜன் சல்பைடு வாயுவைச் சுவாசித்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. தண்ணீர்த் தொட்டியின் அடிப்பகுதியில் இருந்த சேற்றில் அந்த வாயு உருவானதாகத் தெரியவந்துள்ளது என்று பொதுப் பயனீட்டுக் கழகம் அறிக்கை மூலம் தெரிவித்தது.
சம்பவம் குறித்து தங்களுக்கு காலை 11.25 மணிவாக்கில் தகவல் கிடைத்ததாகவும் அதனைத் தொடர்ந்து 51 நன்யாங் டிரைவுக்கு விரைந்ததாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
தீயணைப்பு வீரர்களும் அபாயகரமான பொருள்களைக் கையாளும் நிபுணர்களும் இணைந்து பாதுகாப்பாக ஹைட்ரஜன் சல்பைடு வாயுவை வெளியேற்றினர்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்தில் அந்த நீர்நிலையத்திலிருந்து ஹைட்ரஜன் சல்பைடு வாயு முழுமையாக அகற்றப்பட்டதாகக் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
பாதிக்கப்பட்ட ஊழியர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவர்களில் ஒருவருக்கு ‘சிபிஆர்’ முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஹைட்ரஜன் சல்பைடு வாயுவைச் சுவாசித்தால் கண் எரிச்சல், மூச்சுக்குழாயில் எரிச்சல், சுயநினைவிழப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
வேலையிடத்தில் ஊழியர்களின் பாதுகாப்புக்கும் சுகாதாரத்திற்கும் எப்போதும் முக்கியத்துவம் வழங்கப்படும். இச்சம்பவம் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று பொதுப் பயனீட்டுக் கழகம் தெரிவித்தது.
இந்நிலையில், மாண்ட ஊழியரின் குடும்பத்தைத் தொடர்பு கொண்டுள்ளதாகவும் அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து வருவதாகவும் கழகம் கூறியது.
இத்தகைய சம்பவம் நிகழ்ந்தது இதுவே முதன்முறை என்றும் கழகம் குறிப்பிட்டது.