உட்லண்ட்சில் ஏறத்தாழ 10.4 ஹெக்டர் பரப்பளவிலான வனப்பகுதி அண்மைய தேசிய தினப் பேரணி உரையில் குறிப்பிடப்பட்ட தொழில்துறை, இதர மேம்பாட்டுத் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டிலிருந்து (2026) அங்குள்ள மரங்கள் அகற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 15 காற்பந்துத் திடல்களுக்குச் சமமான அந்த வனப்பகுதி, ஜோகூர் பாரு - சிங்கப்பூர் விரைவு ரயில் போக்குவரத்துக் கட்டமைப்பை (RTS) ஒட்டி மேற்கொள்ளப்படும் புதிய தொழில்துறைத் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ‘ஆர்டிஎஸ்’ போக்குவரத்து அடுத்த ஆண்டு இறுதியில் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் தகவல்கள் ‘ஜேடிசி கார்ப்பரேஷன்’ கடந்த 20ஆம் தேதி இணையத்தில் வெளியிட்ட சுற்றுப்புறப் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
அந்த நிலப்பரப்பில் வர்த்தகக் கட்டடங்களும் குடியிருப்புகளும் கட்டப்படக்கூடும். அந்த மேம்பாட்டுப் பணிகள் 2035ஆம் ஆண்டு நிறைவுபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் லாரன்ஸ் வோங், ஆகஸ்ட் 17ஆம் தேதி ஆற்றிய தேசிய தினப் பேரணி உரையில் சிங்கப்பூரின் வடக்கு வட்டாரங்களுக்குப் புத்துயிர் தரும் மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்துக் கூறியிருந்தார்.
‘ஆர்டிஎஸ்’ நிலையத்தைச் சுற்றி நீக்குப்போக்கான தொழில்துறை இடங்களும் உட்லண்ட்ஸ் நீர்முகப்பை ஒட்டி அமையவிருக்கும் புதிய வீடுகளும் திட்டங்களில் அடங்கும். ஜோகூர் - சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் வட்டாரத்தின் அனுகூலங்களை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள விரும்பும் வர்த்தகங்களுக்கு அந்தத் தொழில்துறை இடங்கள் உதவியாக இருக்கும்.
மொத்தம் ஏறத்தாழ 27.7 ஹெக்டர் நிலப்பகுதி மதிப்பீடு செய்யப்பட்டது. அதில் வனப்பகுதி மட்டுமல்லாமல் முன்னாள் பிரிட்டிஷ் கடற்படைக் காவல்துறை வளாகம் அமைந்திருந்த இடமும் அடங்கும்.
மேம்பாட்டுப் பணிகளால் பாதிக்கப்படக்கூடிய தாவர வகைகளில் பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, மேம்பாட்டு நிறுவனம் வேறு இடங்களில் வேரூன்றச் செய்வது முக்கியம் என்று மதிப்பீட்டு அறிக்கை கூறுகிறது.
தொடர்புடைய செய்திகள்
வனப்பகுதிகளுக்கு இடையே வனவிலங்குகள் நடமாடுவதற்கான முக்கியத் தொடர்புப் பாதையாக அந்த இடம் அமைந்திருக்கவில்லை என்பதை மதிப்பீட்டு அறிக்கை சுட்டியது. அந்த நிலப்பகுதியைச் சுற்றிலும் தொழில்துறைக் கட்டடங்களும் குடியிருப்புகளுமே அமைந்துள்ளதாக அது குறிப்பிட்டது.
இருப்பினும், இந்த மேம்பாட்டுத் திட்டத்துக்காக வனப்பகுதி அழிக்கப்படுவதால் பறவைகள், வௌவால்கள் போன்றவை சிறிதளவு பாதிப்புக்கு உள்ளாக நேரிடும் என்ற கவலை எழுந்துள்ளது.
மேம்பாட்டு நிறுவனம் முதிர்ந்த மரங்களைத் தக்கவைத்துக் கொள்ளுதல், ஆங்காங்கே பசுமையான தாவரவகைகளை நடுதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் இத்தகைய தாக்கத்தைக் குறைக்க இயலும் என்று அறிக்கை கூறியது.
மனிதர்களைப் பொறுத்தவரை, கட்டுமானப் புழுதியால் நேரும் பாதிப்புகள் இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. எனவே, தூசுத் தடுப்புகள் அமைப்பதும் காற்றின் வேகத்தைக் கண்காணிப்பதும் கட்டாயம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
மதிப்பீட்டு அறிக்கையை ‘ஜேடிசி’ நிறுவனத்தின் இணையத்தளத்தில் காணமுடியும். செப்டம்பர் 17ஆம் தேதி வரை பொதுமக்கள் அது குறித்துக் கருத்துரைக்கலாம்.