டிசம்பர் மாதத்திலிருந்து சிங்கப்பூரில் கூடுதலாக பத்து மின்சாரப் பொதுப் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளன.
இதன் மூலம் சிங்கப்பூரில் சேவை வழங்கும் மின்சாரப் பொதுப் பேருந்துகளின் எண்ணிக்கை 70ஆக உயர்கிறது.
பேருந்து எண் 86, 107, 159 ஆகியவற்றுக்கு இந்தப் புதிய மின்சாரப் பேருந்துகள் பயன்படுத்தப்படும்.
சிங்கப்பூரின் வடகிழக்கு, மத்திய பகுதிகளில் சேவை வழங்கும் இந்த மின்சாரப் பேருந்துகள் எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்துக்குச் சொந்தமானவை.
இந்த புதிய 10 பேருந்துகளும் ‘பிஒய்டி’ சீன நிறுவனத்தின் தயாரிப்பு என்று நிலப் போக்குவரத்து ஆணையம் அக்டோபர் 23ஆம் தேதியன்று கூறியது.
செங்காங் வெஸ்ட் வட்டாரத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பேருந்து பணிமனையில் உள்ள மின்னூட்டு உள்கட்டமைப்பைப் பயன்படுத்தும் முதல் பேருந்துகளாக இப்புதிய மின்சாரப் பேருந்துகள் விளங்கும் என்று ஆணையம் கூறியது.
சிலேத்தார் வெஸ்ட் சாலை 1ல் அமைந்துள்ள இந்த ஐந்து மாடி பணிமனையில் ஒரே நேரத்தில் 500 மின்சாரப் பேருந்துகளும் எரிபொருளில் இயங்கும் பேருந்துகளும் இருக்கலாம்.
இப்பணிமனை ஆகஸ்ட் மாதம் எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில் புதிய பணிமனையில் சேவைகளைத் தொடங்க எஸ்பிஎஸ் டிரான்சிட் தயாராகி வருகிறது.
புதிய பணிமனையைக் கட்ட குறைந்தது $400 மில்லியன் செலவாகியுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது.
அதை 2023ஆம் ஆண்டில் திறக்க முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொவிட்-19 நெருக்கடிநிலை காரணமாகத் திறப்பு தடைப்பட்டது.
இதுவே அதிக அளவிலான சக்திவாய்ந்த மின்சார வாகன மின்னூட்டுக் கருவிகளைக்கொண்ட முதல் அடுக்குமாடி பேருந்துப் பணிமனை என்று ஆணையம் தெரிவித்துள்ளது. அங்கு மொத்தம் 240 மின்னூட்டுக் கருவிகள் உள்ளன. ஒவ்வொரு மின்னூட்டுக் கருவியும் 360 கிலோவாட் வரையிலான மின்சாரத்தை வழங்கக்கூடியது.


