சிங்கப்பூரின் பத்து இடங்களில் பாதசாரி, சைக்கிளோட்டிகளுக்கு ‘நட்பார்ந்த’ சாலைகள்

2 mins read
a0b3bbac-3c61-47c8-be27-0ae89e0c444e
பங்கிட் ரோடு போக்குவரத்து விளக்குகளிலிருந்து பாதசாரிகள், சைக்கிளோட்டிகளுக்கு உகந்த பாதுகாப்பான சாலையாக மாற்றப்பட்டுள்ளன. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஹாலந்து அவென்யூ, ஹாலந்து டிரைவ் உட்பட ஹாலந்து வில்லேஜில் கிட்டத்தட்ட 2 கிலோ மீட்டர் சாலைகள் பாதசாரிகளுக்குப் பாதுகாப்பானதாக விரைவில் மாற்றப்பட உள்ளன. வேகத் தடுப்புகள், சில இடங்களில் வேகக் கட்டுப்பாடு போன்றவை அங்கு இடம்பெற உள்ளன.

சந்தைகள், எம்ஆர்டி நிலையங்கள், பள்ளிகள் போன்ற இடங்களை இணைக்கும் சில சாலைகளை மாற்றியமைப்பதன் மூலம், அக்கம்பக்கப் பகுதியின் முக்கிய வசதிகளை பாதசாரிகளும் சைக்கிளோட்டிகளும் புழங்க ஏற்றவையாக்கப்பட உள்ளன.

நிலப் போக்குவரத்து ஆணையம் இந்தத் திட்டத்தை மேற்கொண்டுள்ள பத்து இடங்களில் ஹாலந்து வில்லேஜ்ஜும் ஒன்று.

‘நட்பார்ந்த சாலைகள்’ என்று அழைக்கப்படும் இந்தத் திட்டம் பிடோக், புவாங்கோக், புக்கிட் பாஞ்சாங், சுவா சூ காங், ஜூரோங் ஈஸ்ட், பெக் கியோ, பொங்கோல், செம்பவாங், தியோங் பாரு ஆகிய பகுதிகளிலும் இடம்பெறும்.

பத்து அக்கம்பக்கப் பேட்டைகளில் அத்தகைய ‘நட்பார்ந்த சாலை’ பணிகள் படிப்படியாக 2025ஆம் ஆண்டின் முதல் பாதியில் தொடங்கி, 2026 ஆம் ஆண்டில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார் போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் ஏமி கோர்.

ஹாலந்து வில்லேஜில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 14) இத்திட்டத்தைத் தொடங்கிவைத்து அவர் பேசினார்.

வரும் 2030ல், சிங்கப்பூரில் உள்ள ஒவ்வொரு நகரமும் குறைந்தது ஒரு ‘நட்பார்ந்த சாலை’யைக் கொண்டிருக்கும், என்று அவர் கூறினார்.

சாலையை மாற்றியமைக்கும் இடங்களும் அம்சங்களும் குடியிருப்பாளர்களுடனும் பங்குதாரர்களுடனும் கலந்தாலோசிக்கப்பட்டு முடிவுசெய்யப்பட்டதாக நிலப் போக்குவரத்து ஆணையம் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 14) தெரிவித்தது.

கூடுதலாக தடுப்புகள் இல்லாத சாலைக்கடப்புகள், நீண்ட நேரம் எரியும் பச்சை மனிதன் சமிக்ஞை, வேகத் தடுப்புகள் போன்றவை சேர்க்கப்படவுள்ள சில அம்சங்களாகும்.

இவை பாதசாரிகளுக்கு வசதியாக ஓட்டுநர்கள் வாகனங்களை மெதுவாகச் செலுத்த ஊக்குவிக்கின்றன.

புதிய சாலை அடையாளங்கள் வாகன ஓட்டுநர்கள் ‘நட்பார்ந்த சாலை’க்குள் நுழைவதை காட்டும்.

ஹாலந்து வில்லேஜ், ஹாலந்து அவென்யூ ஹில் பூங்கா நோக்கிச் செல்லும் குடியிருப்பாளர்கள் ஹாலந்து அவென்யுவில் ஒரு புதிய சமிக்ஞையுடன் கூடிய பாதசாரிகளுக்கான சாலைக் கடப்பைக் காணலாம்.

ஹாலந்து டிரைவில் உள்ள பாதசாரிகள் சாலைக் கடப்பு, ஹாலந்து டிரைவ் சந்தை, உணவு மையத்திற்குச் செல்வோருக்கு உதவும் வகையில் இடமாற்றம் செய்யப்படும்.

போக்குவரத்தைக் குறைக்கவும் குறிப்பாக முதியவர்கள், சந்தை, புவன விஸ்தா சமூக மன்றம், ஹாலந்து வில்லேஜ், புவன விஸ்தா எம்ஆர்டி நிலையங்களுக்குச் செல்வதைப் பாதுகாப்பானதாக ஆக்கவும் புதிய வேகத் தடுப்புகள், அகலமான சாலைப் பிரிப்புகள் ஹாலந்து அவென்யூ, ஹாலந்து டிரைவ் ஆகிய இடங்களில் நிறுவப்படும்.

அக்கம்பக்க குடியிருப்பாளர்களில் பத்தில் ஒன்பது பேர், தாங்கள் நடந்து செல்லும் மற்றும் சைக்கிள் ஓட்டும் அனுபவங்கள் மேம்பட்டுள்ளதை ஒப்புக்கொண்டதாக ஆணையம் மேலும் தெரிவித்துள்ளது. தெம்பனிசில் நடைபெற்று வரும் ஐந்தாவது முன்னோடித் திட்டம் மார்ச் மாதத்திற்குள் முடிவடையும்.

குறிப்புச் சொற்கள்