பானக் கொள்கலனைத் திரும்பக் கொடுத்து பத்துக் காசு பெறும் திட்டம் 2026 ஏப்ரலுக்குப் பிறகு அமல்

2 mins read
17e90e61-28d1-4f8e-80af-a0bd1ca34661
150 மில்லிலிட்டர் முதல் 3 லிட்டர் வரையிலான அனைத்து பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் உலோக டின்களுக்கான இத்திட்டம் ஏப்ரல் 1, 2026 முதல் மார்ச் 31, 2033 வரை ஏழு ஆண்டுகளுக்கு நீடிக்கும். - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப் படம்

முதலில் அறிவித்ததை விட ஓர் ஆண்டு கழித்து, ஏப்ரல் 1, 2026 முதல் பானங்கள் அடைக்கப்பட்ட பாட்டில் மற்றும் டின்களுக்கான 10 காசு வைப்புத்தொகையை பயனீட்டாளர்கள் செலுத்த வேண்டும்.

பாட்டில் மற்றும் டின்களில் உள்ள பானத்தைக் குடித்த பிறகு, அவற்றைக் கடைகளில் திருப்பிக் கொடுத்தால் அவர்கள் செலுத்திய 10 காசு வைப்புத்தொகை அவர்களுக்குத் திரும்பக் கொடுக்கப்படும்.

மாற்றங்களைச் சரிசெய்ய அதிக நேரம் தேவைப்பட்டதால், பான உற்பத்தியாளர்கள் காலதாமதத்திற்கான கோரிக்கையை முன் வைத்தனர் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் ஜூலை 31ஆம் தேதி தெரிவித்தது.

இது செப்டம்பர் 2022ல் அறிவிக்கப்பட்ட பானக் கொள்கலன் திரும்பப் பெறும் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்தத் திட்டத்தின் கீழ், பயனீட்டாளர்கள் பாட்டில் மற்றும் டின்னில் அடைக்கப்பட்ட பானங்களுக்கு 10 காசு கூடுதலாகச் செலுத்துவார்கள். பின்னர் காலியான பானக் கொள்கலன்களை நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் திருப்பித் தரும்போது வைப்புத்தொகை முழுவதுமாகத் திரும்பக் கொடுக்கப்படும்.

150 மில்லிலிட்டர் முதல் 3 லிட்டர் வரையிலான அனைத்து பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் உலோக டின்களுக்கான இத்திட்டம் ஏப்ரல் 1, 2026 முதல் மார்ச் 31, 2033 வரை ஏழு ஆண்டுகளுக்கு நீடிக்கும்.

1,000க்கும் மேற்பட்ட பானக் கொள்கலன்களைத் திரும்பப் பெறும் இயந்திரங்கள், பேரங்காடிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் வைக்கப்படும்.

மக்கள் தாங்கள் பயன்படுத்திய காலி கொள்கலன்களைத் திருப்பிக் கொடுக்க வசதிகள் அதிகரிக்கப்படும். மேலும் அது மறுசுழற்சியையும் ஊக்குவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

திட்டத்தின் மூன்றாம் ஆண்டான 2029ல் இருந்து, பானக் கொள்கலனை திருப்பிக் கொடுக்கும் விகிதத்தை 80 விழுக்காட்டுக்கு எட்டுவதும் ஆண்டுதோறும் சந்தையில் வெளியிடப்படும் ஒரு பில்லியன் பானக் கொள்கலன்களில், சுமார் 800 மில்லியன் மறுசுழற்சிக்காக திருப்பித் தரப்படுவதும் வாரியத்தின் இலக்கு.

“இந்தத் திட்டம் பொதுமக்களிடையே மறுசுழற்சிக் கலாசாரத்தை வளர்ப்பதற்கும், மிகவும் மதிப்புமிக்க மறுசுழற்சி செய்யக்கூடிய பொருள்கள் எரியூட்டும் ஆலைக்கும் நமது நிலப்பரப்புகளுக்கும் செல்வதைத் தடுக்கவும் உதவும் என்று நம்புகிறோம்,” என்றார் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஏமி கோர்.

ஜூலை 31ஆம் தேதி நடைபெற்ற சிங்கப்பூர் இயக்குநர் கழகத்தின் முதலாவது பருவநிலை ஆளுமைக்கான சிங்கப்பூர் கருத்தரங்கின் கலந்துரையாடலில் பங்கேற்ற டாக்டர் கோர், இந்த விவரங்களைத் தெரிவித்தார்.

இந்த பானக் கொள்கலன்களைத் திரும்பிக் கொடுக்கும் திட்டம் லாபநோக்கமற்ற நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் கோக்ககோலா நிறுவனம், எஃப்&என் ஃபூட்ஸ் நிறுவனம், போக்கா நிறுவனம் ஆகியவற்றை உள்ளடக்கிய குழுமம் இத்திட்டத்தை மேற்பார்வையிடும்.

குறிப்புச் சொற்கள்