சிங்டெல் நிறுவனமும் அதன் இணை நிறுவனமான கோமோவும் வாடிக்கையாளர்களுக்கு ‘நல்லெண்ணக் கழிவு’களாக $5லிருந்து $10 வரை வழங்கவிருப்பதாக அறிவித்துள்ளது.
மார்ச் மாத நடுப்பகுதியில் ஏற்பட்ட தொடர்ச்சியான சேவைத் தடைகளுக்காக சிங்டெல் நிறுவனம் அந்தக் கழிவுகளை வழங்குகிறது.
செவ்வாய்க்கிழமை (மார்ச் 31) வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில் அண்மையில் ஏற்பட்ட இணைப்புக் கோளாறுகளுக்காக வருந்துவதாக சிங்டெல் நிறுவனம் தெரிவித்தது.
அதற்கு ஒருசிறு வெகுமதியாகக் கழிவுகளை வழங்குவதாகச் சொன்ன சிங்டெல், வாடிக்கையாளர்களின் அடுத்த ஓரிரு கட்டணங்களில் அந்தக் கழிவுகள் தன்னிச்சையாகச் சேர்க்கப்படும் என்றது.
கட்டமைப்பை மேம்படுத்தி மீள்திறனை வலுப்படுத்த தொடர்ந்து பாடுபடப்போவதாகவும் சிங்டெல் கூறியது.
மார்ச் 16ஆம் தேதி சிங்டெல் தொலைதொடர்புச் சேவைகளில் ஏற்பட்ட தடையால் 600,000க்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் சிரமத்துக்குள்ளாகினர். கட்டமைப்பு வசதிகளில் உள்ள தொழில்நுட்பக் கோளாற்றால் அது ஏற்பட்டதாகக் கண்டறியப்பட்டது.
அதையடுத்து மார்ச் 17ஆம் தேதி கிட்டத்தட்ட 2,000 வாடிக்கையாளர்கள் தொலைபேசி இணைப்புகளில் சிக்கலை எதிர்கொண்டனர்.
மார்ச் 18ஆம் தேதி கட்டமைப்பைச் சீர்படுத்தும் பணிகளை சிங்டெல் நிறுவனம் மேற்கொண்டபோது அளவுக்கு அதிகமான பயன்பாட்டால் வாடிக்கையாளர்கள் சேவைத் தடைகளைச் சந்தித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
அடுக்கடுக்காக ஏற்பட்ட இடையூறுகளால் சிங்கப்பூரில் உள்ள முக்கியச் சேவைகள் நிலைகுத்தின. பல சிங்டெல் வாடிக்கையாளர்கள் கட்டணங்களைச் செலுத்த முடியாமல் திண்டாடினர்.
மார்ச் 16ஆம் தேதிக்கும் 18ஆம் தேதிக்கும் இடைப்பட்ட நாள்களில் ஏற்பட்ட சேவைத் தடைகள் குறித்து தகவல், தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் விசாரணை மேற்கொள்கிறது.
வெளிநாடுகளுக்குச் சென்ற ஒருசில வாடிக்கையாளர்கள் சிங்டெலின் வெளிநாட்டுப் பயன்பாட்டுத் திட்டங்களுக்குக் கட்டணம் செலுத்தியிருந்தனர்.
சேவைத் தடை காரணமாக வெளிநாட்டில் உள்ள வாடிக்கையாளர்களும் பாதிக்கப்பட்டனர்.
இதற்குமுன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட சிங்டெல் நிறுவனத்தின் சேவைத் தடை கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் நீடித்தது.

