சிங்கப்பூரில் 10 போலி இணையத்தளங்களை அக்டோபர் 22ஆம் தேதி அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.
சிங்கப்பூருக்கு எதிராகத் தவறான தகவல்களைப் பரப்பும் வெளிநாட்டு அமைப்புகளுடன் அவற்றுக்குத் தொடர்பிருப்பதாகக் கூறப்பட்டது.
செய்தி நிறுவனங்களின் இணையத்தளங்களைப் போன்றே தோற்றமளிக்கும் அந்த போலி இணையத்தளங்கள் சாதாரணப் பார்வைக்கு சந்தேகம் எழுப்பாத வகையில் அமைந்துள்ளன.
இருப்பினும் அரசாங்கங்களின் ஆதரவுடன் மேற்கொள்ளப்படும் வெறுப்பைத் தூண்டும் தகவல்கள் அடங்கிய பிரசாரங்களுக்கு ஈடான தகவல்கள் அவற்றில் இடம்பெற்றிருப்பதாக உலகளாவிய இணைய மிரட்டல் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
உள்துறை அமைச்சும் தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையமும் அக்டோபர் 22ஆம் தேதி வெளியிட்ட கூட்டறிக்கையில், சிங்கப்பூர்ப் பயனாளர்கள் அந்தப் பத்து இணையத்தளங்களையும் பயன்படுத்த இயலாத வண்ணம் தடுக்கும்படி இணையச் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டியதாயிற்று என்று கூறியுள்ளன.
சிங்டெல், எம்1, ஸ்டார்ஹப் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ஒலிபரப்புச் சட்டத்தின்கீழ் அவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகக் கூட்டறிக்கை தெரிவித்தது.
விசாரணையில், அந்த இணையத்தளங்களின் செயல்பாட்டில் சிங்கப்பூரர்கள் யாருக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை என்று உள்துறை அமைச்சு கூறியது.
அவற்றில் சிங்கப்பூருக்கு எதிரான பகைமையைத் தூண்டும் பிரசாரங்கள் இப்போது இடம்பெறாவிட்டாலும், வருங்காலத்தில் அவ்வாறு இடம்பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக அமைச்சு கூறியது.
தொடர்புடைய செய்திகள்
எனவே, பொதுநலனை முன்னிட்டு அந்த இணையத்தளங்கள்மேல் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அது சொல்லிற்று.
சிங்கப்பூர் இணையத்தளங்கள் என்ற போர்வையில் அவை இயங்குவதாக அமைச்சும் ஆணையமும் கூறின. அவற்றின் பெயர்களில் சிங்கப்பூருடன் தொடர்புடைய சொற்கள் உள்ளன. உள்ளூர் அம்சங்களும் காட்சிகளும் அவற்றில் இடம்பெற்றுள்ளன என்று கூறப்பட்டது.
வெளிநாட்டுத் தலையீடு (பதில் நடவடிக்கை) சட்டத்தின்கீழ் (Fica) அந்த இணையத்தளங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு இடமில்லை என்று அமைச்சும் ஆணையமும் கூறின.
1. zaobaodaily.com 2. singaporeinfomap.com 3. Singaporeera.com 4. Singdaotimes.com 5. Todayinsg.com 6. Lioncitylife.com 7. Singapuranow.com 8. Voasg.com 9. Singdaopr.com 10. Alamak.io ஆகியவை அந்த இணையத்தளங்கள்.
2020ஆம் ஆண்டு முதல் அவை ஆங்கிலத்திலும் சீனமொழியிலும் செய்திகளையும் பொருளியல், கலாசாரம், அரசியல் போன்ற துறைகள் சார்ந்த தகவல்களையும் வெளியிட்டுவருகின்றன.
அக்டோபர் 22ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் சோதித்தபோது அந்தப் பத்து இணையத்தளங்களும் தடைசெய்யப்பட்டிருந்ததாகக் கூறியது.

