சிங்கப்பூரர்கள் ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து திரும்பத் தரப்படும் ஒவ்வொரு காலி போத்தல்களுக்கும் பானக் கலன்களுக்கும் 10 காசை வாடிக்கையாளர்கள் திரும்பப் பெறலாம்.
பானங்களை விநியோகம் செய்யும் இயந்திரங்களில் காலி போத்தல்களையும் கலன்களையும் போட்டு ‘ஈஸி லிங்க்’ அட்டையைப் பயன்படுத்தி அந்த 10 காசை அவர்கள் பெறலாம்.
காலி பானக் கலன்களைத் திரும்பத் தரும் திட்டத்தின்கீழ் ஈஸி லிங்க் அட்டை வழியாக காசைத் திரும்பப் பெறும் அம்சம் அறிமுகம் காணும் என்றும் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணையமைச்சர் ஜனில் புதுச்சேரி வெள்ளிக்கிழமை (ஜனவரி 30) தெரிவித்தார்.
ஏப்ரல் 1ஆம் தேதி திட்டம் தொடங்கும்போது காலி போத்தல்களையும் கலன்களையும் திரும்பப் பெற தீவெங்கும் ஏறக்குறைய 1,000 இயந்திரங்கள் வைக்கப்படும். ஓராண்டுக்குள் அந்த எண்ணிக்கை 2,000க்கு அதிகரிக்கப்படும் என்று டாக்டர் ஜனில் குறிப்பிட்டார்.
பேரங்காடிகள், வீடமைப்பு வளர்ச்சிக் கழக கீழ்த்தளங்கள், நகர மன்றங்கள் ஆகியவற்றுடன் மக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் இயந்திரங்கள் வைக்கப்படும்.
கழக வீடுகளில் வசிக்கும் 90 விழுக்காட்டுக் குடியிருப்பாளர்கள் ஐந்து நிமிடங்களுக்குள் காலி போத்தல்களைத் திரும்பத் தரும் இயந்திரங்களைச் சென்றடையும் வகையில் ஆங்காங்கே அவை வைக்கப்பட்டிருக்கும்.
‘ஈஸி லிங்க்’ அட்டைகள் இல்லாதோர் காசைத் திரும்பப் பெற கூடிய விரைவில் பிற மின்னிலக்க கட்டண முறைகள் அறிவிக்கப்படும்.
புதிய திட்டத்தின்கீழ், 150 மில்லி லிட்டரிலிருந்து மூன்று லிட்டர் வரையிலான போத்தல் அல்லது கலனில் உள்ள பானங்களுக்கு வாடிக்கையாளர்கள் கூடுதலாக 10 காசை முன்பணமாகச் செலுத்துவர். அந்த முன்பணம் காலி போத்தல்களையும் கலன்களையும் திரும்பத் தரும்போது வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
புதிய நடைமுறையால் பொதுமக்கள் தங்கள் வழக்கத்தை மாற்றிக்கொள்ளவேண்டிய நிலை ஏற்படும் என்று டாக்டர் ஜனில் வலியுறுத்தினார்.
காலி போத்தல்களையும் கலன்களையும் திரும்பப் பெறும் இயந்திரங்களை உருவாக்கும் டொம்ரா (TOMRA) என்ற நார்வேஜிய நிறுவனத்தின் புதிய அலுவலகத் திறப்பு விழாவில் டாக்டர் ஜனில் பேசினார்.

