மத்திய சேமநிதிப் பங்களிப்பு, சம்பளத் தொகை ஆகியவை தொடர்பாகப் பொய்யுரைத்ததாக இரு வெவ்வேறு வழக்குகளில் 10 பேர்மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து மனிதவள அமைச்சு வெள்ளிக்கிழமை (அக்டோபர் 16) அறிக்கை வெளியிட்டது. 31 முதல் 61 வயதுக்குட்பட்ட ஏழு முதலாளிகள் மற்றும் ஒரு நிர்வாக உதவி ஊழியர்மீது அக்டோபர் 8ஆம் தேதி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதாக அது தெரிவித்தது.
இவர்கள் தங்கள் நிறுவனங்களில் வேலை செய்யாத உள்ளூர்வாசிகளுக்கு மத்திய சேமநிதிப் பங்களிப்பு வழங்கியதாகக் கூறப்படுகிறது. அவர்கள் அந்த நிறுவனங்களில் பணிபுரியும் உள்ளூர் ஊழியர்கள் எனப் பொய்யுரைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
வெளிநாட்டு ஊழியர்களுக்கான வேலை அனுமதிச் சீட்டுகளைச் சட்டவிரோதமாகப் பெறுவதற்காகவே இவ்வாறு பொய்யுரைக்கப்பட்டது. இது வெளிநாட்டு மனிதவள வேலைவாய்ப்புச் சட்டத்தின்கீழ் குற்றச்செயலாகும்.
இந்த எட்டுப் பேர்மீது வேலை அனுமதிச் சீட்டு விண்ணப்பங்களில் பொய்ப் பிரகடனம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், ஒருவரின் வேலைவாய்ப்பு நிலவரம் குறித்துத் தவறான தகவல்களை வழங்கும் நோக்கில், கடந்த காலத் தேதியிட்ட போலி ஆவணங்களில் கையெழுத்திடுமாறு பணித்து, வேலைவாய்ப்பு அதிகாரியின் விசாரணைக்கு இடையூறு விளைவித்ததாக ஹூ ருய்ஷெங்மீது தனியாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மற்றொரு வழக்கில், பொய் சம்பளப் பிரகடனம் செய்ததற்காக இருவர்மீது மனிதவள அமைச்சு குற்றம் சாட்டியுள்ளது. ஆயுர்வேத மையம் ஒன்றை நடத்தி வந்த இவர்கள், எம்பிளாய்மென்ட் பாஸ் வேலை அனுமதி அட்டை வைத்திருந்த இருவருக்கு முறையே மாதம் $5,100, $7,350 சம்பளம் தருவதாகப் பொய்யுரைத்துவிட்டு, நடைமுறையில் $800 முதல் $2,300 மட்டுமே வழங்கி வந்த குற்றத்திற்காகக் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களுக்கான தண்டனை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
