ஜூரோங் வட்டாரத்தில் இரண்டு லாரிகள் ஒன்றோடு ஒன்று மோதியதில் பத்துப் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் எட்டுப் பேர் இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்கும் இருவர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.
அந்த பத்துப் பேரும் 26 வயதுக்கும் 55 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். மேலும், அவர்கள் அனைவரும் ஒரே லாரியில் இருந்துவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
துவாசை நோக்கிச் செல்லும் ஆயர் ராஜா விரைவுச்சாலையில் விபத்து நிகழ்ந்தது குறித்து கடந்த வியாழக்கிழமை (மே 29) காலை 8.30 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் கூறின.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் தவிர இதர ஏழு பேருக்கு இலேசான காயங்கள் ஏற்பட்டதாகவும் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டதாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை சனிக்கிழமை (மே 31) தெரிவித்தது.
விபத்து தொடர்பான விசாரணையில் 34 வயது லாரி ஓட்டுநர் உதவி வருகிறார்.
2023 ஜூலை முதல் 2024 ஜனவரி வரை லாரியின் பின்னால் அமர்ந்து சென்றவர்கள் தொடர்பான 49 விபத்துகள் நிகழ்ந்ததாக உள்துறை அமைச்சு இவ்வாண்டு பிப்ரவரியில் நாடாளுமன்றத்தில் தெரிவித்து இருந்தது.

