சிங்கப்பூர் வருவாய் ஆணைய அதிகாரிகள்போல் நடித்து மோசடி

2 mins read
4d81622e-0776-4f34-84e5-301c6bf16f30
“ஆணையத்தின் கணக்கில் கூடுதல் பணம் செலுத்தி விட்டீர்கள். அப்பணத்தைத் திரும்பப் பெற நீங்கள் தகுதியுடையவர்கள்,” என மோசடிக்காரர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவார்கள் எனக் காவல்துறை தெரிவித்தது. - படம்: சிங்கப்பூர் காவல்துறை

சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணைய அதிகாரிகள்போல் தங்களை அடையாளப்படுத்தி கொண்டு இணைய மோசடியில் ஈடுபடுபவர்களிடம் சிக்கி பாதிக்கப்பட்டவர்கள் குறைந்தது $9000 இழந்துள்ளனர் எனச் சிங்கப்பூர் காவல்துறை டிசம்பர் 20ஆம் தேதி தெரிவித்தது.

டிசம்பர் 9ஆம் தேதியிலிருந்து இதுவரை குறைந்தது 10 பேர் அந்த மோசடிக்காரர்களிடம் சிக்கி பணத்தை இழந்துள்ளதாக அது மேலும் குறிப்பிட்டது.

அவர்கள் சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் அனுப்புவது போன்று போலி மின்னஞ்சல் ஒன்றை பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுப்புவார்கள் எனக் காவல்துறை தெரிவித்தது.

ஆணையத்தின் கணக்கில் கூடுதல் பணம் செலுத்தி விட்டீர்கள் எனவும் அப்பணத்தைத் திரும்பப் பெற நீங்கள் தகுதியுடையவர்கள் எனவும் அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டிருக்கும் என அது எடுத்துரைத்தது.

பணத்தைத் திரும்ப பெற விரும்புபவர்கள் கொடுக்கப்பட்டிருக்கும் இணையதள இணைப்பைச் சொடுக்கி தங்கள் வங்கி பற்று அட்டை அல்லது கடன் அட்டை குறித்த விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டிருக்கும் என அது கூறியது.

அதை நம்பி அனைத்து விவரங்களையும் தருபவர்களின் பணத்தை மோசடி செய்வதுதான் இந்த மோசடிகாரர்களின் வேலை என அது தெரிவித்தது.

இதுபோன்ற மோசடிகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள, ‘ஸ்கேம் ஷீல்டு’ போன்ற செயலிகளைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும்படி காவல்துறை அறிவுறுத்தியது.

மேலும் தனிப்பட்ட கணக்குகளுக்கான இரண்டு அம்ச அங்கீகாரம் போன்ற பாதுகாப்பு அம்சங்களை அமைக்குமாறு பொதுமக்களுக்கு அது நினைவூட்டியது.

வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் இணையப் பரிவர்த்தனை வரம்புகளை அமைக்க வேண்டும். இதன் மூலம் மோசடி செய்பவர்கள் திருடக்கூடிய பணத்தின் அளவைக் கட்டுப்படுத்தலாம் என்று காவல்துறை அவ்வறிக்கையில் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்