உட்லண்ட்ஸ் வீட்டில் தீ விபத்து: 100 பேர் வெளியேற்றப்பட்டனர்

1 mins read
5865a8a9-b7cf-48b9-a882-6eca888d14e6
உட்லண்ட்ஸ் ஸ்திரீட் 81ல் உள்ள புளோக் 806ல் இருக்கும் ஒரு வீட்டில் பின்னிரவு 2 மணிக்குத் தீ மூண்டதை அடுத்து 100 பேர் அப்புறப்படுத்தப் பட்டனர். படம்: சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை -

உட்லண்ட்ஸ் ஸ்திரீட் 81ல் உள்ள புளோக் 806ல் இருக்கும் வீடு ஒன்றில் திங்கள்கிழமை அதிகாலை தீ மூண்டதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 100 பேர் அப்புறப்படுத்தப்பட்டனர்.

புகையைச் சுவாசித்ததை அடுத்து மூவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். மின் கசிவு காரணமாக தீ மூண்டதாக முதல் கட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.

வீட்டின் வரவேற்பு அறையில் இருந்த தனிநபர் நடமாட்டச் சாதனம் ஒன்றுதான் தீ மூண்டதற்குக் காரணம் என்று நம்பப்படுகிறது.

இந்தச் சம்பவத்துக்கு 11 நாள்களுக்கு முன்னதாக, டிசம்பர் 8ஆம் தேதி, ஹெண்டர்சன் ரோட்டில் இருக்கும் ஈரறை வீடு ஒன்றில் தீ மூண்டது. அதற்கும் மின் கசிவே காரணமாக இருக்கும் என்று கருதப்பட்டது.

அந்தச் சம்பவத்தில் தீயை அணைத்துக்கொண்டு இருந்த முதலாம் சார்ஜண்ட் எட்வர்ட் எச். கோ மரணமடைந்தார்.

இதனிடையே, இன்றைய தீ விபத்து பற்றி தகவல் தெரிவித்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, மின்கலன்களை அளவுக்கு அதிக நேரம் அல்லது இரவு முழுவதும் மின் இணைப்பிலேயே இணைத்து வைக்காதீர்கள் என்று குடியிருப்பாளர்களுக்கு அறிவுரை கூறியது. அதேபோல் நம்பத்தகுந்த மின்கலன்களை வாங்கும்படியும் அது ஆலோசனை கூறியது.

சிங்கப்பூரில் 2021ஆம் ஆண்டில் தனிநபர் நடமாட்டச் சாதனம் தொடர்பான 32 தீச்சம்பவங்கள் நிகழ்ந்தன. மின்சார சைக்கிள்கள் சம்பந்தப்பட்ட 23 தீ விபத்துகள் நிகழ்ந்தன.