நீர் மேலாண்மைத் திட்டங்கள், மேம்பாட்டுப் பணிகள் ஆகியவற்றுக்குக் கிட்டத்தட்ட 100 மில்லியன் வெள்ளி நிதி வழங்கப்பட்டுள்ளது என்று துணைப் பிரதமர் கான் கிம் யோங் தெரிவித்துள்ளார்.
இந்த நிதி மூலம் நகரங்களுக்கும், தொழிற்பேட்டைகளுக்குமான நீர் கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும் சுத்திகரிக்கப்பட்ட நீரை ஆராய்ச்சி செய்யவும் ஆய்வுக்கூடம் கட்டப்படவுள்ளது.
சிங்கப்பூர் அனைத்துலக தண்ணீர் வாரம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) மரினா பேவில் தொடங்கியது. நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் கலந்துகொண்டு பேசிய போது துணைப் பிரதமர் கான் இத்தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
11வது முறையாக நடக்கும் இந்த மாநாட்டில் கிட்டத்தட்ட 2,000 பேர் கலந்துகொண்டனர். அவர்களில் 700 பேர் உலக நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள். மேலும் 500க்கும் அதிகமான நிறுவனங்களும் கலந்துகொண்டன.
தெங்கா நகரம் முழுமையாகக் கட்டி முடிப்பதற்கு முன்னரே அங்குள்ள நீர்த்தேக்கம் கட்டிமுடிக்கப்பட்டதையும் திரு கான் சுட்டிக்காட்டினார்.
“சிங்கப்பூருக்குத் தண்ணீர் மூலம் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று நினைத்துவிடக்கூடாது. பருவநிலை மாற்றத்தால் அதிகமான வறட்சி அல்லது மழை ஏற்படக்கூடும். நாம் இப்போது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் கடல் நீர்மட்டம் உயரும்போது சிங்கப்பூரின் பரப்பளவில் மூன்றில் ஒரு பங்கு வெள்ளத்தால் மூழ்கக்கூடும்,” என்று அவர் எச்சரித்தார்.
“அதேநேரம், பொருளியலுக்குத் துணையாக இருக்கும் நிறுவனங்களுக்கு நீர்த் தேவை அதிகமாகலாம். அதனால் நாம் எதிர்காலத்தை மனத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று துணைப் பிரதமர் கான் வலியுறுத்தினார்.
நீர் தொடர்பான சவால்களைச் சிங்கப்பூர் நீண்டகால முதலீடுத் திட்டங்கள், புத்தாக்கம், அனைத்துலக ஒத்துழைப்பு ஆகியவற்றின் மூலம் எதிர்கொண்டு வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
ஆய்வு, புத்தாக்கம், தொழில் நிறுவன 2030 திட்டத்தின் கீழ் 85 மில்லியன் வெள்ளி பொதுப் பயனீட்டுக் கழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் நீர் பாதுகாப்பு மற்றும் நீடித்த நிலைத்தன்மை, கடல்நீர் குடிநீராக்கம் மற்றும் நீர் தூய்மைக்கேட்டைக் கையாள்வது ஆகியவற்றில் மேம்பட்ட ஆய்வுப்பணிகளை மேற்கொள்ள அந்த நிதி உதவும்.
“இதுபோன்ற ஆய்வுகள் சிங்கப்பூரின் தேவைக்கு மட்டும் அல்ல. உலக நாடுகளில் உள்ள பல நகரங்களுக்கும் நிறுவனங்களுக்கும் நம்முடைய திட்டங்கள் உதவக்கூடும்,” என்று வர்த்தக, தொழில் அமைச்சுக்குப் பொறுப்பு வகிக்கும் திரு கான் குறிப்பிட்டார்.

