மூத்த மேலாளர்களைத் தவிர்த்து, அனைத்து ஊழியர்களுக்கும் வெகுமதியாக $1,000 சிறப்பு போனஸ் வழங்கப்படும் என டிபிஎஸ் குழுமம் திங்கட்கிழமை (பிப்ரவரி 10) அறிவித்துள்ளது.
2024ல் சாதனை அளவாக லாபம் ஈட்டிய சிங்கப்பூரின் ஆகப்பெரிய வங்கியான டிபிஎஸ், புதிய ‘கேப்பிட்டல் ரிட்டர்ன்’ ஈவுத்தொகையை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
2024ன் கடைசி காலாண்டில் அவ்வங்கியின் நிகர லாபம் 10 விழுக்காடு கூடி, $2.62 பில்லியனாகப் பதிவானது. ஆண்டு முழுவதுக்குமான நிகர லாபம் 11 விழுக்காடு அதிகரித்து, $11.4 பில்லியனாகப் பதிவானதால், 2024ல் தான் சாதனை அளவாக லாபம் ஈட்டியதாக டிபிஎஸ் தெரிவித்தது.
திங்கட்கிழமை (பிப்ரவரி 10) காலை 9.02 மணி நிலவரப்படி, டிபிஎஸ் பங்கு விலை $1.70, அல்லது 3.8 விழுக்காடு உயர்ந்து, முதன்முறையாக $46ஐத் ($46.38) தாண்டியது.
ஊழியர்களுக்கு போனஸ் வழங்க அவ்வங்கிக்கு மொத்தம் $32 மில்லியன் செலவாகும். முன்னதாக 2024 பிப்ரவரியில், வாழ்க்கைச் செலவினங்களைச் சமாளிக்க உதவ 5,500க்கும் மேற்பட்ட இளநிலை ஊழியர்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் போனஸ் தொகையாக டிபிஎஸ் $1,000 வழங்கியிருந்தது.
2024ன் கடைசி காலாண்டுக்காக, ஒரு பங்கிற்கு 60 காசு இறுதி ஈவுத்தொகை செலுத்த தான் திட்டமிட்டுள்ளதாக டிபிஎஸ் தெரிவித்தது. 2023ன் அதே காலகட்டத்தில் அது 54 காசாக இருந்தது.
அதன்படி, ஆண்டு முழுவதுக்குமான அவ்வங்கியின் சாதாரண ஈவுத்தொகை ஒரு பங்கிற்கு $2.22ஆக, அல்லது $6.31 பில்லியனாக உள்ளது. 2023ல் இருந்ததைவிட இது 27 விழுக்காடு அதிகம்.
2025 நிதியாண்டில் ஒவ்வொரு காலாண்டுக்கும், ஒரு பங்கிற்கு 15 காசு ‘கேப்பிட்டல் ரிட்டர்ன்’ ஈவுத்தொகையை அறிமுகம் செய்யவும் டிபிஎஸ் திட்டம் கொண்டுள்ளது.