10,000 வெளிநாட்டு ஊழியர்களுக்கு பீட்சா, சமோசா விநியோகம்

10,000 வெளிநாட்டு ஊழியர்களுக்கு பீட்சா, சமோசா விநியோகம்

2 mins read

புக்கிட் தீமாவில் உள்ள ஆர்க்கேடியா ரோட்டில் இன்று சனிக்கிழமை காலை (நவம்பர் 13) மூன்று மணிநேரத்துக்கு, அடுத்தடுத்து கார்கள் வந்து நின்ற வண்ணம் இருந்தன.

சைவ பீட்சா, சமோசா ஆகிய உணவை எடுத்துச்செல்ல அவை அங்கு வந்தன. சிங்கப்பூர் முழுவதும் வெவ்வேறு பணியிடங்களில் வேலை செய்யும் வெளிநாட்டு ஊழியர்களிடம் அந்த உணவை வழங்கி அவர்களிடையே தீபாவளிக் குதூகலத்தைப் பரப்புவதே தொண்டூழியர்களின் நோக்கம்.

-

அறக்கொடை அமைப்பான 'இட்ஸ்ரெய்னிங் ரெய்ன்கோட்ஸ்', ஒவ்வோர் ஆண்டும் இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு திட்டமிடுவதற்கு ஏறத்தாழ இரண்டு மாதங்கள் ஆனதாக அந்த அமைப்பின் நிறுவனர் தீபா சுவாமிநாதன் தெரிவித்தார்.

வெளிநாட்டு ஊழியர்கள் 10,000க்கும் மேற்பட்டோரிடம் தொண்டூழியர்கள் உணவை இன்று கொண்டுசேர்த்தனர். நன்கொடையாளர்களின் ஆதரவில் உணவு விநியோகம் இடம்பெற்றது. பீட்சா ஹட், ஆல்ட் பீட்சா, கோர்மெட் ரெடி ஆகிய நிறுவனங்களும் தங்களது பங்கிற்கு உணவை நன்கொடை அளித்தன.

ஏறத்தாழ 1,400 பீட்சா உணவு விநியோகம் செய்யப்பட்டது. அதில் 1,000 பீட்சாவை பீட்சா ஹட் நிறுவனம் நன்கொடை அளித்தது.

தமது அறப்பணி குறித்து பேசிய திருவாட்டி தீபா, "வெளிநாட்டு ஊழியர்கள் தினமும் ஒரே மாதிரியான உணவையே அருந்துகின்றனர். நம்மைப் போன்றே அவர்களும் பல்சுவை உணவை விரும்புவர். எனவே, இந்த முறை அவர்களுக்கு பீட்சா வழங்க நாங்கள் விரும்பினோம். அவர்களுக்கு இந்த முயற்சி பிடிக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். எனவேதான் ஒவ்வோர் ஆண்டும் இதில் நாங்கள் ஈடுபடுகிறோம்," என்றார்.

தீபாவளியை முன்னிட்டு கடந்த ஆறாண்டுகளாக வெளிநாட்டு ஊழியர்களுக்கு நன்கொடைத் திரட்டு முயற்சியில் 'இட்ஸ்ரெய்னிங் ரெய்ன்கோட்ஸ்' ஈடுபட்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்