கரையோரப் பூந்தோட்டங்களில் கண்காட்சிகளைக் காண 10,000 இலவச நுழைவுச்சீட்டுகள்

கரையோரப் பூந்தோட்டங்களில் கண்காட்சிகளைக் காண 10,000 இலவச நுழைவுச்சீட்டுகள்

2 mins read
f864c5dc-bac7-4d2f-b09b-5fc7d797d1ca
கரையோரப் பூந்தோட்டங்களில் ‘டிஸ்னி கார்டன் ஆஃப் வொண்டர்’ கண்காட்சியைச் சுற்றிப் பார்த்தார் பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

‘ஃபேமிலிஸ் ஃபார் லைஃப்’ அமைப்பும் மக்கள் கழகமும் ஏற்பாடு செய்யும் குறிப்பிட்ட நிகழ்ச்சிகளிலும் பயிலரங்குகளிலும் பங்கேற்கும் குடும்பங்களுக்கு, இம்பா அரங்கில் நடைபெறும் தேர்ந்தெடுக்கப்பட்ட கண்காட்சிகளைக் காண 10,000 இலவச நுழைவுச்சீட்டுகள் வரை வழங்கப்படவுள்ளன.

கரையோரப் பூந்தோட்டங்களின் இரு திட்டங்களில் ஒன்றான இது, சிங்கப்பூரில் குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும் சமுதாயக் கட்டமைப்பை வலுப்படுத்த அமைப்புகளையும் தனிநபர்களையும் ஊக்குவிப்பதற்கான ஒரு முன்னோடித் திட்டமாக அமையும் என்று பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா சனிக்கிழமை (ஜூன் 20) தெரிவித்தார்.

இம்பா அரங்கிற்கு வருகைதந்த ஃபெய் யுவே குடும்பச் சேவை நிலையத்தைச் சேர்ந்த 20 குடும்பத்தினர் உள்ளிட்டோரிடையே அவர் உரையாற்றினார். பிள்ளைகளுடன் வெளியில் செல்வதால் சில நேரங்களில் அதிகச் செலவு ஏற்படுவதாக மக்களிடமிருந்து அரசாங்கத்துக்கு கருத்துகள் கிடைத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

“எனவே, பிள்ளைகளும் குடும்பங்களும் எளிதாகவும் கட்டுப்படியான செலவிலும் பங்கேற்கக்கூடிய நடவடிக்கைகளை நாங்கள் ஊக்குவிக்க விரும்புகிறோம்.

“இக்கருத்துகளை நான் இம்பா, கரையோரப் பூந்தோட்டங்கள் நிர்வாகத்திடம் பகிர்ந்தபோது, குடும்பங்கள் ஒன்றிணைந்து கண்காட்சிகளைக் கண்டு மகிழும் பொருட்டு, இம்பா அரங்கிற்கான இலவச நுழைவுச்சீட்டுகளை வழங்க அவை முன்வந்தன,” என்றார் திருமணம், பிள்ளைப்பேற்றுப் பணிக்குழுத் தலைவருமான அமைச்சர் இந்திராணி.

திருமணம், குழந்தை பெற்றுக்கொள்வது குறித்த முடிவுகளில் முக்கிய அங்கம் வகிக்கும் அம்சங்களான செலவுகள், வேலை-வாழ்க்கைச் சமநிலை ஆதரவு, பாலர் பள்ளி, கல்வி போன்றவற்றை பணிக்குழு ஆராய்ந்து வருவதாக அவர் தெரிவித்தார்.

“இந்த அம்சங்கள் பெற்றோரின் வாழ்க்கை அனுபவங்களை வடிவமைக்கின்றன. குடும்பங்களுக்கான ஆதரவை அரசாங்கம் எவ்வாறு வலுப்படுத்தலாம் என்பது குறித்து நாங்கள் மறு ஆய்வு செய்து வருகிறோம்,” என்று கூறிய அமைச்சர் இந்திராணி, சிங்கப்பூரைக் குடும்பங்களுக்கு உகந்த இடமாக மாற்றுவதற்கு ஒட்டுமொத்த சமுதாயத்தின் கூட்டு முயற்சி தேவை என வலியுறுத்தினார்.

இதன் பொருட்டு, இம்பா அரங்கில் நடைபெறும் இரு கண்காட்சிகளுக்காக கரையோரப் பூந்தோட்டம் இலவச நுழைவுச்சீட்டுகளை வழங்குகிறது.

அத்துடன், சமூகச் சேவை அமைப்புகளுடன் இணைந்து நுழைவுச்சீட்டுகளை விநியோகிக்கவும் ‘டிஸ்னி கார்டன் ஆஃப் வொண்டர்’ கண்காட்சிக்கு குடும்பங்களை அழைத்துச்செல்லவும் அது ஏற்பாடு செய்கிறது.

‘ஃபேமிலிஸ் ஃபார் லைஃப்’ அமைப்பின் தேசியக் குடும்ப விழாக்களிலோ ஜூலையில் மக்கள் கழகத்தின் பெற்றோர் நலப் பயிலரங்குகளிலோ பங்கேற்பவர்களுக்குப் பயணச்சீட்டுகள் வழங்கப்படும்.

தேசியக் குடும்ப விழா நிகழ்ச்சிகள் ஜூன் 19 முதல் 21 வரை வொயிட் சேண்ட்ஸ் மால் கடைத்தொகுதியிலும் ஜூன் 20 முதல் 21 வரை கம்போங் அட்மிரால்டியிலும், ஜூன் 27 முதல் 28 வரை செங்காங் கிராண்ட் மால் மற்றும் நார்த்ஷோர் பிளாசாவிலும் ஜூலை 11ஆம் தேதி பிளான்டேஷன் பிளாசாவிலும் நடைபெறவுள்ளன.

குறிப்புச் சொற்கள்