நவீன சிங்கப்பூரைக் கட்டி எழுப்பிய நாட்டின் முதல் பிரதமர் லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாளைக் கொண்டாட பல்வேறு யோசனைகளை சமூகம் முன்வைத்துள்ளது.
திரு லீ விட்டுச்சென்ற சிறப்புகளை ஆராயும் மாநாடுகள், அவரது பண்புநெறிகள், வாழ்க்கை அனுபவங்கள் பற்றிய வெளியீடுகள், இளைய தலைமுறை சிங்கப்பூரரை ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் ஆகியவை இதில் அடங்கும் என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூருக்கு திரு லீயின் பங்களிப்புகளையும் அவரது கொள்கைகளையும் நினைவுகூருவது முக்கியம் என்று வணிகத் தலைவர்கள், அடித்தள அமைப்புகள், கல்வியாளர்கள், ஊடகங்கள் என பல்வேறு சமூகக் குழுக்களும் கருதுவதாக டாக்டர் டான் நேற்று நாடாளுமன்றத்தில் கூறினார்.
"குறிப்பாக சிங்கப்பூர் இளைய ரிடையே திரு லீயின் பங்களிப்புபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த அவர்கள் விழைகின்றனர். இதில் பலர் மிக இள வயதினர் அல்லது திரு லீ அமைச்சரவையிலிருந்து விலகும்போது பிறந்திருக்காதவர்கள்," என்றார் டாக்டர் டான்.
1923 செப்டம்பர் 16ஆம் தேதி பிறந்த திரு லீ குவான் இயூவுக்கு இவ்வாண்டு 100வது பிறந்தநாள்.
இதைக் கொண்டாடவும் அவர் நாட்டுக்கு ஆற்றிய பங்களிப்பை நினைவுகூரவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதா என்ற பொத்தோங் பாசிர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு சித்தோ யி பின்னின் கேள்விக்கு டாக்டர் டான் பதிலளித்தார்.
நாட்டின் முதல் பிரதமராகவும் மூத்த அமைச்சராகவும் மதியுரை அமைச்சராகவும் 58 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராகச் சேவையாற்றிய திரு லீ 2013ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.
தனியார் கல்வி நிதி ஒன்றை வணிகத் தலைவர்கள் பரிந்துரைத்துள்ளனர். கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்த திரு லீயை நினைவுகூர இது பொருத்தமானது என அவர்கள் கூறியதாக அமைச்சர் டான் சொன்னார்.
பல்வேறு தரப்பினருடன் இணைந்து அரசாங்கம் நூற்றாண்டு விழா திட்டங்களை ஒருங்கிணைக்க உள்ளது. அரசாங்க அமைப்புகளும் திட்டங்களைக் கொண்டுள்ளன.
சிங்கப்பூர்ச் சிற்பிகள் நினைவகத்திற்கு பொதுமக்களிடமிருந்து பொருள்கள், கதைகளைத் திரட்டும் தேசிய மரபுடைமை வாரியத்தின் கண்காட்சிகள் அவற்றில் ஒன்று.
ஆண்டின் பிற்பகுதியில் நாட்டு நிர்மாணத் தலைவர்கள் தொடர்பான முக்கிய வரலாற்று மைல்கற்கள் பற்றிய தேசிய அரும்பொருளகத்தில் இடம்பெறும்.
சிங்கப்பூர் நாணய ஆணையம் இவ்வாண்டு நினைவு நாணயத்தை வெளியிடவுள்ளது. மேல் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.