போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர் ஒருவர் ஏப்ரல் 14 அன்று கைதுசெய்யப்பட்டார்.
அவரிடமிருந்தும் அவரின் மோட்டார் சைக்கிளிலிருந்தும் 326 கிராம் ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருள்களும் சுமார் 2,300 வெள்ளி ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டன.
இம்மாதம் 12ஆம் தேதியிலிருந்து 17ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு (சிஎன்பி) மேற்கொண்ட முறியடிப்பு நடவடிக்கையில் கைதுசெய்யப்பட்ட 104 பேரில் அந்த 34 வயது சிங்கப்பூரரும் ஒருவர். பெண்டமியர், கிளமென்டி, ஜூரோங் வெஸ்ட், மரீன் பரேட், தெலுக் பிளாங்கா, ஈசூன் போன்ற பகுதிகளில் முறியடிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
15 கிராமுக்கும் மேலான, கலப்படமில்லாத ஹெராயினைக் கடத்தியது நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்குக் கட்டாய மரண தண்டனை விதிக்கப்படக்கூடும்.
பலவகை போதைப்பொருள்களையும் எட்டோமிடேட் உள்ள 10 மின்சிகரெட்டுகளையும் தாங்கள் பறிமுதல் செய்ததாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 17) அறிக்கை மூலம் தெரிவித்தது. பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்களின் மொத்த மதிப்பு 281,000 வெள்ளிக்கும் மேல் இருக்கும் என்றும் அது குறிப்பிட்டது.
மேலும், பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின், ‘ஐஸ்’, கஞ்சா போதைப்பொருள்களை ஒரு வாரத்தில் 894 போதைப் புழங்கிகள் பயன்படுத்தக்கூடிய அளவிலானது என்றும் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு சுட்டியது.

