ஆகஸ்ட் மாத இறுதியில் நாடெங்கும் நடத்தப்பட்ட ஐந்து நாள் அதிரடிச் சோதனையில் பல்வேறு குற்றங்களுக்காக ஏறத்தாழ 106 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
அளவுக்கு அதிகமான சரக்குகளை ஏற்றிச் சென்றது, அனுமதி வழங்கப்படாத நிலையிலும் விரைவுச்சாலையில் சென்றது போன்ற குற்றங்களுக்காக அந்த வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக செப்டம்பர் 5ஆம் தேதியன்று நிலப் போக்குவரத்து ஆணையம் அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டது.
விரைவுச்சாலையில் செல்ல குறிப்பிட்ட வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. குறிப்பிட்ட அளவுக்குப் பிறகு பெரிதாக இருக்கும் வாகனங்களுக்கு விரைவுச்சாலைகளில் செல்ல அனுமதி இல்லை. ஆனாலும் அவ்வாறு சென்ற சில வாகனங்கள் பிடிபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
“இந்த கனரக வாகனங்கள் சாலைப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கக்கூடியவை. மிகவும் பெரிதாகவும் கனமாகவும் இருப்பதால் சாலைகளை அவை சேதப்படுத்தக்கூடியவை,” என்று ஆணையம் கூறியது.
சாலைகளைப் பயன்படுத்தும் மற்றவர்களின் பாதுகாப்பு, சௌகரியத்தைப் பாதுகாக்க இத்தகைய வாகனங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
அளவுக்கு அதிகமான சரக்குகளை ஏற்றிச் சென்றதற்காகவும் சில வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
அந்தச் சரக்குகள் சாலையில் அல்லது சாலையில் சென்றுகொண்டிருக்கும் மற்றவர்கள் மீது விழக்கூடும் என்றும் விழுந்தால் மற்றவர்களுக்கு அபாயத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
“இத்தகைய குற்றங்களைக் கடுமையானதாகக் கருதுகிறோம். சாலைகளைப் பயன்படுத்தும் அனைவரும் பாதுகாப்புடன் இருப்பதை உறுதி செய்ய அமலாக்கப் பணிகள் தொடரும்,” என்று ஆணையம் தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
ஜனவரி மாதத்துக்கும் ஜூலை மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் கனரக வாகனங்கள் தொடர்புடைய சாலை விபத்துகளில் 310 பேர் காயமடைந்ததாக சிங்கப்பூர் புள்ளிவிவரத்துறையின் இணையப்பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.