போதைப்பொருள் குற்றம் தொடர்பாக அதிகாரிகள் நடத்திய வேட்டையில் 107 சந்தேக நபர்கள் பிடிபட்டனர்.
ஐந்து நாள்கள் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் சுவா சூ காங்கில் உள்ள வீடு ஒன்றில் சிங்கப்பூரர்களான ஆணும் பெண்ணும் பிடிபட்டனர்.
அதிகாரிகள் அந்த வீட்டை வலுக்கட்டாயமாகத் திறக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு திங்கட்கிழமை (ஏப்ரல் 14) கூறியது.
கைதான ஆடவருக்கு 50 வயது என்றும் பெண்ணின் வயது 54 என்றும் அது தெரிவித்தது. அவ்விருவரும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
ஏப்ரல் 8ஆம் தேதி கைதான அவர்களிடம் இருந்து 28 கிராம் ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
15 கிராமுக்கு மேல் உண்மையான ஹெராயின் போதைப்பொருளைக் கடத்துவோர் மரண தண்டனையை எதிர்நோக்குவர்.
கைதான 107 பேரில் அந்த இருவரும் அடங்குவர்.
போதைப்பொருள் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க தீவு முழுவதும் ஏப்ரல் 7 முதல் ஏப்ரல் 11 வரை ஐந்து நாள்கள் அதிகாரிகள் தீவிர வேட்டையில் ஈடுபட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
அங் மோ கியோ, பாலஸ்டியர், பிடோக், பொங்கோல் போன்ற வட்டாரங்களும் சோதனை நடத்தப்பட்ட பகுதிகளில் அடங்கும்.
பிடிபட்டவர்களிடம் இருந்து மொத்தம் 133 கிராம் ஐஸ் போதைப்பொருள், 78 கிராம் கஞ்சா, 69 கிராம் ஹெராயின், 0.4 கிராம் கெட்டாமைன், 16 எக்ஸ்டசி மாத்திரைகள் ஆகியன கைப்பற்றப்பட்டன. அவற்றின் மதிப்பு $25,400.
கைதான அனைவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

