பானக் கலன்களைத் திருப்பிக் கொடுக்க 1,070 இயந்திரங்கள் அறிமுகம்

இயந்திரங்கள் இருக்குமிடங்களைக் கண்டறிய இணையத்தளம் அறிமுகம்

பானக் கலன்களைத் திருப்பிக் கொடுக்க 1,070 இயந்திரங்கள் அறிமுகம்

2 mins read
91b287c4-2ad1-4f67-8360-1f15d27c894d
குறியிடப்பட்ட கலன்களை மட்டுமே இந்த இயந்திரங்கள் ஏற்றுக்கொள்ளும். கலன்களை ஒன்றன்பின் ஒன்றாகக் கொடுத்தபின் உரிய தொகையைப் பெறமுடியும். தொகை பெறுவதற்கு முன் தொலைபேசி எண்ணின் கடைசி நான்கு இலக்கங்களைச் சரிபார்க்க முடியும். இயந்திரத்தைப் பயன்படுத்திப் பார்க்கும் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புறத் துறை மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி. - படம்: சாவ்பாவ்

பானக் கலன்களைத் திருப்பிக் கொடுக்கும் திட்டம் அறிமுகமாவதையடுத்து முதற்கட்டமாக 1,070 இயந்திரங்கள், மக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் வைக்கப்படவுள்ளன.

பல்பொருள் அங்காடிகள், உணவங்காடிகள் எனப் பல்வேறு இடங்களில் வைக்கப்படவுள்ள இந்த இயந்திரங்கள் இருக்குமிடங்களைக் கண்டறிய ‘ரிடர்ன் ரைட்’ எனும் இணையத்தளமும் அறிமுகம் கண்டுள்ளது.

புதிய இயந்திரங்கள் நிறுவப்பட்ட பிறகு, கிட்டத்தட்ட 90 விழுக்காட்டு வீவக வீடுகளிலிருந்து ஐந்து நிமிடம் நடந்து இத்தகையதொரு இயந்திரம் இருக்கும் இடத்துக்குச் சென்றுவிட முடியும்.

இந்த இணையத்தளம் புதன்கிழமையிலிருந்து செயல்படத் தொடங்கும். அடுத்தடுத்த கட்டங்களில் நிறுவப்படவிருக்கும் மேலும் 160 இயந்திரங்களின் இருப்பிடங்களையும் அதில் காணமுடியும். இயந்திரங்களின் கொள்ளளவு, இயங்கும் நேரம் ஆகியவற்றையும் இந்த இணையத்தளம் மூலம் அறியலாம்.

பானக் கலன்களைத் திருப்பிக் கொடுக்கும் திட்டத்துக்கான அமைப்பு, அனைத்துலகக் கழிவுகள் மறுபயனீட்டு நாளான மார்ச் 18 ஆம் தேதியன்று இந்த இணையத்தளத்தை அறிமுகம் செய்தது.

ஒன் பொங்கோல் வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஊடகங்களுக்கான இயந்திரப் பயன்பாட்டு விளக்க நிகழ்ச்சியில், “மக்கள் பல்வேறு கலன்கள், போத்தல்களைக் கொடுத்து 10 காசு பெற நினைப்பார்கள். ஆனால், இதற்கென ஒட்டப்பட்ட தனிப்பட்ட ஒட்டுவில்லைகள் அல்லது குறியீடுகளைக் கொண்ட கலன்களை மட்டுமே திருப்பிக் கொடுக்க முடியும்,” என்றார் இவ்வமைப்பின் தலைமை நிர்வாகி ஸ்டெஃபனி யிப்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புறத் துறை மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி, பொதுமக்களிடையே மறுபயனீடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வாய்ப்புகளைச் சமூகக் குழு, லாப நோக்கற்ற அமைப்புகள் ஆகியவை எதிர்நோக்குவதாகச் சொன்னார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புறத் துறை மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி, இயந்திரம் அனைத்து மொழிகளிலும் செயல்படுவதை உறுதிசெய்தார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புறத் துறை மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி, இயந்திரம் அனைத்து மொழிகளிலும் செயல்படுவதை உறுதிசெய்தார். - படம்: லாவண்யா வீரராகவன்

மறுபயனீடு, மறுசுழற்சி விகிதங்களை அதிகரிப்பதில் இத்திட்டம் முக்கியப் பங்கு வகிக்கும் என்று திரு ஜனில் கூறினார்.

தொடர்ந்து, இயந்திரப் பயன்பாடு, இத்திட்டத்தில் பங்குபெறும் அங்காடிகள், உணவுக்கடைகளின் மாதிரிக் கட்டணச் சீட்டு உள்ளிட்ட விளக்கங்களை அவர் கேட்டறிந்தார்.

குறிப்புச் சொற்கள்