தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
64ஆம் ராணுவ நிபுணத்துவப் பயிற்சி அதிகாரி தேர்ச்சி அணிவகுப்பு

தங்க வாள் விருது பெற்ற தமிழர்

3 mins read
077fa72c-3d3c-41f0-8404-b8e36920d41a
தங்க வாள் விருதை வென்ற மூன்றாம் சார்ஜன்ட் ஜோசுவா. விருதை அவருக்கு வழங்கும் துணையமைச்சர் தினே‌ஷ் வாசு தாஸ். - படம்: தற்காப்பு அமைச்சு
multi-img1 of 4
Watch on YouTube

தொடர்ச்சியான முயற்சியும் மனக் கட்டுப்பாடும் கொண்டிருந்தால் அனைவராலும் தம்மை மேம்படுத்திக்கொள்ள முடியும் என்கிறார் மூன்றாம் சார்ஜன்ட் ஜோசுவா ரவிந்தரன், 21.

இரவு பகல் பாராமல் கடுமையான பயிற்சியை மேற்கொள்ளும் ராணுவ உளவுப் பிரிவில், சக வீரர்கள் களைப்பாக இருந்தபோதெல்லாம் அவர்களை உற்சாகப்படுத்தினார் அப்போது படைப்பிரிவு (platoon) சார்ஜன்ட்டாக இருந்த ஜோசுவா.

ஆகஸ்ட் 21ஆம் தேதி நடைபெற்ற 64/25 நிபுணத்துவப் பயிற்சி அதிகாரி தேர்ச்சி அணிவகுப்பில் தங்க வாள் விருதை அவர் பெற்றார். அணிவகுப்பில் ராணுவ உளவுப் பிரிவிலிருந்து தேர்ச்சிபெறும் தலைசிறந்த வீரர் என்ற முறையில் அவருக்கு அந்த விருது வழங்கப்பட்டது.

அணிவகுப்பை மேற்பார்வையிடும் அதிகாரியாக வந்திருந்த மனிதவள, கலாசார, சமூக, இளையர்துறைத் துணையமைச்சர் தினே‌ஷ் வாசு தாஸ் ஜோசுவாவிற்கு அவ்விருதை வழங்கினார்.

நிபுணத்துவப் பயிற்சியில் ஜோசுவா வெளிப்படுத்திய மனவுறுதி, தலைமைத்துவம் ஆகியவற்றுக்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

அவர் உட்பட, சிங்கப்பூர் ஆயுதப்படையின் 1,086 பேர் நிபுணர்களாகவும் இராணுவ வல்லுநர்களாகவும் பாசிர் லாபா முகாமில் 64வது ராணுவ நிபுணத்துவப் பயிற்சி அதிகாரி தேர்ச்சி அணிவகுப்பில் தேர்ச்சிபெற்றனர். அவர்களில் 892 பேர் ராணுவத்தினர், 81 பேர் கடற்படையினர், 49 பேர் ஆகாயப்படையினர், 64 பேர் மின்னிலக்க, உளவுத்துறைப்படையினர்.

“நவீன தொழில்நுட்பம் சிங்கப்பூர் ஆயுதப்படைக்குக் கைகொடுத்தாலும் நம் மக்கள், வீரர்களின் மனத் திண்மையே வெற்றியைக் கொண்டுவரும். உங்கள் தலைமைத்துவமும் ஒவ்வொரு வீரரிடமிருந்தும் சிறந்த பண்புகளை வெளிக்கொணரும் உங்கள் ஆற்றலுமே இத்தொழில்நுட்பங்களின் பயன்களைப் படையினர் முழுமையாக உணர வழிவகுக்கும்,” என்றார் துணையமைச்சர் தினே‌ஷ்.

குடும்பத்தில் வழிகாட்டிகள்

“என் தந்தை எப்போதும் எதைச் செய்தாலும் அதில் தலைசிறந்தவராகத் திகழ வேண்டும் என்று கூறுவார். அதை மனத்தில் கொண்டு நானும் எதைச் செய்தாலும் சிறப்பாகச் செய்ய முனைகிறேன்,” என்றார் ஜோசுவா. ஜோசுவாவின் தந்தை சிங்கப்பூர் ஆயுதப்படையில் முன்னர் முழுநேர வீரராகப் பணியாற்றியவர். தேவாலயத்தில் பணிபுரியும் தாயார் மகனுக்குப் பொறுமையையும் பொறுப்பையும் கற்பித்தவர்.

மூன்றாம் சார்ஜன்ட் பதவிக்கான சின்னத்தைத் தந்தை ரவிந்தரன் மகனுக்கு அணிவிப்பதைப் பெருமையுடன் காணும் தாயார்.
மூன்றாம் சார்ஜன்ட் பதவிக்கான சின்னத்தைத் தந்தை ரவிந்தரன் மகனுக்கு அணிவிப்பதைப் பெருமையுடன் காணும் தாயார். - படம்: ரவி சிங்காரம்

ஜோசுவாவின் மாமாக்களில் ஒருவர் ராணுவத்தில் முழுநேர வீரராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். மற்றொருவர் கடற்படையில் முழுநேர வீரராகப் பணிபுரிகிறார். அவர்களும் தன் ராணுவப் பயணத்தில் அதிக அக்கறை செலுத்துவதாகக் கூறினார் ஜோசுவா.

தன் இலக்கைப் புரிந்துகொண்ட சக வீரர்கள் அதை எப்போதும் நினைவுபடுத்தி ஆதரவளித்ததாக அவர் கூறினார். “அவர்கள் என்மீது கவனம் செலுத்துவதால்தான் என்னால் பிறருக்கு உதவ முடிகிறது,” என்றார் ஜோசுவா.

தங்க வாள் விருதைப் பெற்ற மூன்றாம் சார்ஜன்ட் ஜோசுவா ரவிந்தரன். 
தங்க வாள் விருதைப் பெற்ற மூன்றாம் சார்ஜன்ட் ஜோசுவா ரவிந்தரன்.  - படம்: ரவி சிங்காரம்

ஜோசுவா தங்க வாள் விருதைப் பெறும் பெருமைமிகு தருணத்தைக் காண அவருடைய பெற்றோரும் உற்ற தோழர் டேரனும் வந்திருந்தனர்.

மூன்றாம் சார்ஜன்ட் ஜோசுவா தன் குடும்பத்தினர், உற்ற தோழர் டேரன் உடன்.
மூன்றாம் சார்ஜன்ட் ஜோசுவா தன் குடும்பத்தினர், உற்ற தோழர் டேரன் உடன். - படம்: ரவி சிங்காரம்

‘இது என் கடமை’

ஒன்பது வார அடிப்படை ராணுவப் பயிற்சிக்குப் பிறகு நிபுணத்துவப் பள்ளிக்குத் தகுதிபெற்றார் ஜோசுவா.

“முதன்முதலில் எனக்கு சார்ஜன்ட் பொறுப்பு தரப்பட்டபோது சிறந்து விளங்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். நிபுணத்துவப் பள்ளியில் எட்டு வார அடிப்படைப் பயிற்சியில் தலைசிறந்த வீரராக அங்கீகாரம் பெற்றேன். தொடர்ந்து ராணுவ உளவுத் துறையில் தொழில்முறைப் பயிற்சி மேற்கொண்டேன்,” என்றார் ஜோசுவா.

மொத்தம் 22 வார நிபுணத்துவப் பயிற்சியில், ஹெலிகாப்டரில் செல்வது, நீரில் தடைகளைத் தாண்டுவது எனப் பலவித அனுபவங்களையும் பெற்றுள்ளார் ஜோசுவா.

ராணுவத்தின் ‘கண்கள், காதுகளாக’ ஜோசுவாவும் உளவுத்துறையில் அவரது சக வீரர்களும் எதிரிப் படையினரிடமிருந்து தகவல்களைச் சரியான நேரத்தில் சேகரிப்பதில் பயிற்சி பெறுகின்றனர். அவர்களின் தகவல்கள்மூலம் படைத்தலைவர்களால் அறிவார்ந்த முடிவுகளை எடுக்க முடியும்.

ஜோசுவாவைப் பொறுத்தவரை மனக் கட்டுப்பாடு, விடாமுயற்சி போன்றவை ராணுவத்துடன் நின்றுவிடவில்லை.

வாரத்தின் ஓய்வு நாள்களிலும் உடற்பயிற்சிக் கூடத்துக்குச் செல்கிறார். உடற்கட்டோடு இருப்பதை முன்னிலைப்படுத்துகிறார்.

புதிய பிரிவில் சார்ஜன்ட்டாகத் தன் கடமையை ஆற்ற ஆவலுடன் காத்திருக்கிறார் ஜோசுவா.

குறிப்புச் சொற்கள்