கூட்டு முயற்சியை பறைசாற்றிய நகராட்சி சேவைகள் விருதுகள்

2 mins read
ac37864a-8c5f-47e1-950e-201ea3f15bff
ஒன் பொங்கோலில் நடைபெற்ற 10வது நகராண்மைச் சேவைகள் விருது விழாவில் தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் ஆல்வின் டான் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். - படம்: சாவ்பாவ்

தொழில்நுட்பம் நம்மைச் சீராய்ச் செயல்பட உதவினாலும் அனுதாபமே நம்மைச் சிறப்புடன் வாழ வழிவகுப்பதாக தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் ஆல்வின் டான் கூறியுள்ளார்.

ஒன் பொங்கோலில் நடைபெற்ற 10வது நகராண்மைச் சேவைகள் விருதுககளில் திங்கட்கிழமை (நவம்பர் 17) திரு டான் உரையாற்றியபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் முழுவதும் சுற்றுப்புறங்களை வலுப்படுத்திய கூட்டுறவையும் அர்ப்பணிப்பையும் பறைசாற்றும் வகையில் இவ்விழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இவ்வாண்டு மொத்தம் 14 தனிநபர்களும் குழுக்களும் கௌரவிக்கப்பட்டனர்.

பல நிறுவனங்களுக்கும் சமூகக் குழுக்களுக்கும் இடையேயான பங்காளித்துவத்தை இவ்விழா எடுத்துக்காட்டியது.

சிங்கப்பூரின் நகராண்மைச் சூழல் கடந்த பத்தாண்டுகளில் வலுவான ஒருங்கிணைப்பு, ஆழ்ந்த சமூகப் பங்கேற்பு போன்ற காரணங்களால் குறிப்பிடத்தக்க பரிணாமம் அடைந்துள்ளது என்று சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு விருதுகளை வழங்கிய திரு டான் எடுத்துரைத்தார்.

விரிவான இந்த அமைப்பை அவர், இசைக்குழுவுடன் ஒப்பிட்டார். நகராண்மைச் சேவைகள் அலுவலகம் நடத்துநராகச் செயல்பட்டாலும், இசைக்குழுவின் ஒவ்வொரு உறுப்பினரும் தங்கள் கடமைகளைச் சரியாக நிறைவேற்றினால்தான் முழுமையான இசை பிறக்கும் என அவர் வலியுறுத்தினார். வெறுமனே நடத்துநர் மட்டும் இருந்தால் எதுவும் சாத்தியமாகாது என்று அவர் கூறினார்.

“நீங்கள் ஒரு நகர மன்ற மேலாளராகவோ, அடித்தளத் தலைவராகவோ அல்லது உங்கள் சுற்றுப்புறத்தைப் பற்றி அக்கறை கொண்ட ஒரு குடியிருப்பாளராகவோ இருக்கலாம். நம் இல்லமான இந்த இடங்களை மேம்படுத்த நீங்கள் ஒவ்வொருவரும் பங்களித்து வருகிறீர்கள்,” என்று திரு டான் கூறினார்.

இன்றைய நகராண்மைப் பணி என்பது பிரச்சினைகள் நிகழ்ந்தபிறகு தீர்வு காண்பது மட்டுமன்று என்று திரு டான் கூறினார்.

அனைவரும் முன்கூட்டியே இணைந்து செயல்பட்டு, வாழ்வதற்கு இன்னும் சிறந்த சூழலை உருவாக்கும் பங்காளித்துவத்தை நிலைநாட்டுவது பற்றியது என்றும் அவர் கூறினார்.

தேசியச் சுற்றுப்புற வாரியம், சிங்கப்பூர் காவல்துறை, மனிதவள அமைச்சின் ‘ஏஸ்’ குழு, வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், நகர மன்றம், அடித்தள அமைப்புகள் உட்பட பல்வேறு அமைப்புகள் விருதுகளுடன் நிகழ்ச்சியில் அங்கீகரிக்கப்பட்டன.

வெளிநாட்டு ஊழியர்கள் ஓர் இடத்தில் கூட்டமாக கூடுவதால் சில நேரங்களில் ஏற்படும் சிக்கல்களைச் சமாளிக்க முயற்சிகளை எடுத்து வந்த சமூக பிரிவில் விருது பெற்ற குழுக்களில் ஒன்றான ஆயர் ராஜா சமூகப் பணிக்குழுவும் சிறப்பிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் விருதுபெற்ற ஆயர் ராஜா சமூகப் பணிக்குழு.
நிகழ்ச்சியில் விருதுபெற்ற ஆயர் ராஜா சமூகப் பணிக்குழு. - படம்: நகராண்மைச் சேவைகள் அலுவலகம்

இந்த விருது தங்களின் பணியை மேலும் மேம்படுத்தத் துாண்டுவதாகவும் குடியிருப்பாளர்களின் தேவைகள் தாங்கள் செய்யும் ஒவ்வொரு செயலின் மையமாகத் தொடரும் என்றும் ஆயர் ராஜா–கெக் போ குடிமக்கள் ஆலோசனைக் குழு துணைத் தலைவர் செல்வகுமார் பன்னீர்செல்வம், 38, தெரிவித்தார்.

புக்கிட் பாஞ்சாங் குடியிருப்பாளர் குழுவைச் சேர்ந்த அடித்தளத் தலைவர் பெருமாள் மூர்த்தியும் அவரது குழுவினரும், தாங்கள் வசிக்கும் குடியிருப்பில் முதன்முறையாக செல்லப்பிராணிகளுக்கெனச் சிறப்புப் பூங்காவை உருவாக்கப்பட்டதற்காக விருதைப் பெற்றனர்.

புக்கிட் பாஞ்சாங்கில் உருவாக்கப்பட்ட செல்லப்பிராணிகள் பூங்காவிற்காக விருதைப் பெறும் குழுவினர்.
புக்கிட் பாஞ்சாங்கில் உருவாக்கப்பட்ட செல்லப்பிராணிகள் பூங்காவிற்காக விருதைப் பெறும் குழுவினர். - படம்: நகராண்மைச் சேவைகள் அலுவலகம்

கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்கும் மேலாக சமூக சேவையில் ஈடுபட்டுவரும் 56 வயது திரு மூர்த்திக்கு இந்த விருது குழுப்பணியின் உணர்வைக் பிரதிபலித்ததாக குறிப்பிட்டார். “மக்களை ஒன்றிணைக்கும் இடங்களைத் தொடர்ச்சியாக உருவாக்க நாங்கள் மேலும் ஊக்கம் பெற்றுள்ளோம்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்