அரசியல் பதவி வகிப்போர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர்க்கான சம்பளம் மற்றும் படித்தொகை உயர்வால் அரசாங்கத்திற்கு ஆண்டுக்கு $11.6 மில்லியன் வரை கூடுதலாகச் செலவாகும் என்று பொதுச் சேவைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார்.
அரசியல் பதவி வகிப்போர் அனைவர்க்கும் ஒருமுறை மட்டும் அதிகபட்சமாக 9 விழுக்காடு சம்பள உயர்வு வழங்கப்பட்டால் ஒவ்வோர் ஆண்டும் அரசாங்கத்திற்கு $5 மில்லியன் கூடுதலாகச் செலவாகும் என்று திரு சான் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 8) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அதுபோல, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சம்பளம், படித்தொகை உயர்வால் அரசாங்கத்திற்கு ஆண்டுக்கு ஏறக்குறைய $6.6 மில்லியன் கூடுதல் செலவு ஏற்படும் என்றும் அவர் சொன்னார்.
சம்பளம், படித்தொகை உயர்வுப் பரிந்துரைகளால் அரசாங்கத்திற்கு எவ்வளவு கூடுதல் செலவு ஏற்படும் என்ற கேள்விகள் தவிர்க்க முடியாதவை என்றும் அவர் கூறினார்.


