சிங்கப்பூரில் வசதிக்காக திருமணம் செய்துகொண்ட 11 சந்தேக நபர்கள், குடிநுழைவு சோதனைச் சாவடிகள் ஆணையம் (ஐசிஏ) கடந்த இரண்டு வாரங்களில் நடத்திய சோதனைகளில் கைது செய்யப்பட்டனர்.
இதுபோன்ற குற்றங்களில் வெளிநாட்டவர் ஒருவரை சிங்கப்பூரர் திருமணம் செய்துகொள்வது வழக்கமாகவுள்ளது.
இவ்வாறு செய்யும் வெளிநாட்டவருக்கு எப்படியாவது சிங்கப்பூருக்குள் நுழைவது அல்லது இங்கு நீண்டநாள் வாழ்வது என்பவை நோக்கமாக அமைகின்றன. திருமணத்தை வைத்து நீண்டநாள் வருகையாளர் அட்டை, குறுகிய கால அனுமதி அட்டை போன்றவற்றைப் பெறுவது அவர்களின் இலக்காகும்.
உள்ளூர்வாசிகளுக்கு தேவைக்கேற்ப வழங்கப்படும் பணத்தைப் பெற்றுக்கொள்வது அல்லது வேறு சில நிபந்தனைகளை நிறைவேற்றிக்கொண்டு திருமணம் செய்வது பொதுவான காரணமாக உள்ளது.
குடிநுழைவு சோதனைச் சாவடிகள் ஆணையத்தால் ஆண்டுதோறும் வெளியிடப்படும் புள்ளிவிவரங்களின்படி, 2025ஆம் ஆண்டில் 15 நபர்கள் போலித் திருமணங்கள் செய்து பிடிபட்டனர். அதற்கும் முந்தைய ஆண்டான 2024ல் அந்த எண்ணிக்கை 41ஆக இருந்தது.
ஐசிஏ அதிகாரிகள் திடீர் சோதனைகள் நடத்தும்போது திருமணத் தம்பதிகள் பெரும்பாலும் ஒரே இடத்தில் வாழ்வது கிடையாது. அவர்கள் திருமணத்துக்கு விண்ணப்பிக்கும்போது கூறிய காரணங்களும் ஆவணங்களும் ஒன்றாக வாழ்வதாகவே குறிப்பிடப்பட்டிருக்கும் என்று அறியப்படுகிறது.
தண்டனை விவரம்
தம்பதியினரின் கைதுக்குப் பிறகு, இதுபோன்ற போலித் திருமண விசாரணைகள் அவர்கள்மீது குற்றம் சுமத்த சட்டப்படி இடம் உள்ளதா என்பதை அறிய தலைமை சட்ட அதிகாரியின் அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் சிறை, $10,000 வரை அபராதம் அல்லது இரு தண்டனைகளும் விதிக்கப்பட்டலாம்.
கூடுதல் நடவடிக்கையாக குடிநுழைவு சார்ந்த குற்றங்கள் நிரூபிக்கப்பட்ட வெளிநாட்டினர் நாடு கடத்தப்படலாம். அவர்கள் மீண்டும் சிங்கப்பூர் வருவதற்கு தடை விதிக்கப்படலாம். இதனை ஐசிஏவின் அமலாக்கப் பிரிவின் துணைத் தலைவர் ஜஸ்டின் குவோ விளக்கினார்.


