தோ பாயோ காப்பிக்கடையில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 24) நடந்த சண்டை தொடர்பாக 11 பேர்மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அவர்களைத் தவிர்த்து, 30 வயது ஆடவர் ஒருவரும் 22 வயது மாது ஒருவரும் காவல்துறை விசாரணையில் துணைபுரிந்து வருகின்றனர்.
காணொளி: எஸ்ஜி சீக்ரட்/டெலிகிராம்
21க்கும் 33 வயதுக்கும் இடைப்பட்ட நான்கு ஆடவர்கள்மீது செவ்வாய்க்கிழமையும் (ஆகஸ்ட் 26) 23க்கும் 34 வயதுக்கும் இடைப்பட்ட ஏழு ஆடவர்கள்மீது புதன்கிழமையும் (ஆகஸ்ட் 27) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை புளோக் 10B, லோரோங் 7 தோ பாயோ காப்பிக்கடையில் மூண்ட சண்டையில் 13 பேர் கும்பலாக இருவரைத் தாக்கியதாகவும் அவர்களில் சிலர் ஆயுதங்களை வைத்திருந்ததாகவும் நம்பப்படுகிறது. ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் கத்தி காவல்துறையால் கைப்பற்றப்பட்டது.
சண்டையில் ஒருவரது கையிலும் மற்றொருவரின் முதுகிலும் வெட்டுக்காயம் ஏற்பட்டது. இருவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டது.
சம்பவ இடத்திலிருந்து அந்த 13 பேர் தப்பிச் சென்றாலும் கண்காணிப்புக் கருவிகளின் உதவியோடு அவர்களின் அடையாளங்களைக் காவல்துறை கண்டறிந்து கைதுசெய்தது.
அபாயகரமான ஆயுதத்தால் கலவரத்தில் ஈடுபட்டதற்காக அவர்களுக்கு அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் பிரம்படியும் விதிக்கப்படலாம்.