தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போர் தொடங்கியபின் 11 சிங்கப்பூரர்கள் ஈரானிலிருந்து வெளியேற்றம்

2 mins read
5e97fc8d-3229-41dc-a7ce-6a5adbf8908e
ஈரானுக்கும் இஸ்‌ரேலுக்கும் இடையே போர் மூண்டதை அடுத்து ஈரானிலிருந்து சிங்கப்பூரர்கள் சிலர் வெளியேறியுள்ளனர்.  ஈரானிய-ஆர்மீனியா எல்லை மற்றும் பண்டார் அப்பாஸ் துறைமுகம் வழியாக ஈரானிலிருந்து வெளியேறிய ஏழு சிங்கப்பூரர்களுக்கு வெளியுறவு அமைச்சு உதவி வழங்கியது. அந்த ஏழு பேரும் ஐக்கிய அரபு சிற்றரசுகளுக்குச் சென்றதாக வெளியுறவு அமைச்சு கூறியது. - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

ஈரானுக்கும் இஸ்‌ரேலுக்கும் இடையிலான போர் தொடங்கியதிலிருந்து 11 சிங்கப்பூரர்கள் ஈரானிலிருந்து வெளியேறிவிட்டதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஓமானிய அரசாங்கத்தின் உதவியுடன் மூன்று சிங்கப்பூரர்கள் ஈரானியத் தலைநகர் டெஹ்ரானிலிருந்து வெளியேற்றப்பட்டதாக வெளியுறவு அமைச்சு திங்கட்கிழமையன்று (ஜூன் 23) தெரிவித்தது.

அம்மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

ஓமானியத் தலைநகர் மஸ்கட்டுக்கு அவர்களுடன் ஓமானியர்கள் மற்றும் மற்ற நாட்டினர் சிலர் கொண்டு செல்லப்பட்டனர்.

மற்றொரு சிங்கப்பூரர், மலேசியர்கள் மற்றும் மற்ற நாட்டினர்களுடன் மலேசிய அரசாங்கத்தின் உதவியுடன் ஈரானிலிருந்து வெளியேற்றப்பட்டு துர்க்மெனிஸ்தானியத் தலைநகர் அஷ்கபாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கிருந்து அவர் உட்பட 24 பேர் விமானம் மூலம் புறப்பட்டு மலேசியாவை அடைந்தனர்.

அவர்களில் 17 மலேசியர்களும் மலேசியர்களுடன் நெருங்கிய உறவுக்காரர்களான ஆறு ஈரானியர்களும் அடங்குவர்.

அவர்கள் பயணம் செய்த விமானம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) இரவு 11.03 மணிக்குக் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் முனையம் 1ல் தரையிறங்கியது.

இந்தத் தகவலை மலேசியாவின் ஸ்டார் நாளிதழ் வெளியிட்டது.

இந்நிலையில், ஈரானிய-ஆர்மீனியா எல்லை மற்றும் பண்டார் அப்பாஸ் துறைமுகம் வழியாக ஈரானிலிருந்து வெளியேறிய ஏழு சிங்கப்பூரர்களுக்கு வெளியுறவு அமைச்சு உதவி வழங்கியது. அந்த ஏழு பேரும் ஐக்கிய அரபு சிற்றரசுகளுக்குச் சென்றதாக வெளியுறவு அமைச்சு கூறியது.

“ஈரானுக்கும் இஸ்‌ரேலுக்கும் இடையே போர் மூண்டதிலிருந்து ஈரானில் உள்ள சிங்கப்பூரர்களுக்கு உதவி வழங்கப்பட்டு வருகிறது. ஈரானில் சிங்கப்பூர் தூதரகம் இல்லாததால் சிங்கப்பூரர்களை வெளியேற்ற வேறு வழிகள் பற்றி பரிசீலனை செய்யப்படுகிறது,” என்று வெளியுறவு அமைச்சின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

ஈரானில் உள்ள சிங்கப்பூரர்கள் அங்கிருந்து வெளியேற உதவும் வகையில் ஓமானியத் தலைநகர் மஸ்கட்டில் உள்ள சிங்கப்பூர் தூதரகமும் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள சிங்கப்பூர் தூதரகமும் ஓமானிய, மலேசிய அரசாங்கங்களுடன் இணைந்து செயல்படுவதாக அவர் கூறினார்.

“சிங்கப்பூரர்கள் பாதுகாப்புடன் தாயகம் திரும்ப உதவும் ஓமானிய அரசாங்கத்துக்கும் மலேசிய அரசாங்கத்துக்கும் சிங்கப்பூர் அரசாங்கம் நன்றி தெரிவித்துக்கொள்கிறது,” என்று வெளியுறவு அமைச்சின் செய்தித்தொடர்பாளர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்