தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பன்னாட்டு நடவடிக்கையில் 110 கிலோ ‘ஐஸ்’ பறிமுதல்

2 mins read
99f4a28d-6ee6-4319-bba2-fdc3d627d155
நியூசிலாந்திற்கு அனுப்பப்பட்ட பொட்டலங்களில் 10 கிலோவுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. - படம்: மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு

நாடுகடந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலை முறியடிக்க ஐந்து நாடுகளில் நடத்தப்பட்ட நடவடிக்கையில் மொத்தம் சுமார் 110 கிலோகிராம் மெத்தம்ஃபெட்டமின் (ஐஸ்) போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்தப் போதைப்பொருள் மெக்சிகோவிலிருந்து வந்ததாக நம்பப்படுகிறது. மேலும் ஆசிய பசிபிக் வட்டாரத்தில் அதிக லாபகரமான சந்தைகளுக்கு விநியோகிக்க அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்பட்டதாக செப்டம்பர் 22ஆம் தேதி ஐந்து நாடுகளைச் சேர்ந்த ஏழு அமலாக்க அமைப்புகள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, சிங்கப்பூர், புருணை, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த இந்த அமைப்புகளின் ஒத்துழைப்பு, உளவுத்துறைப் பகிர்வின் விளைவாக போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஏப்ரல் மாதத்தில், சிங்கப்பூரின் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவுக்கு (சிஎன்பி), கிடைத்த ஒரு ரகசிய தகவலைத் தொடர்ந்து, 10 கிலோவுக்கும் அதிகமான ‘ஐஸ்’ கொண்ட பொட்டலங்களை இடைமறித்து அது பறிமுதல் செய்தது.

இந்தப் பொட்டலங்கள் அமெரிக்காவிலிருந்து வந்ததாகவும் சிங்கப்பூர் வழியாக நியூசிலாந்திற்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் நம்பப்படுகிறது. மேலும் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிற்குச் செல்லும் இதே போன்ற பொட்டலங்களை சிஎன்பி அடையாளம் கண்டுள்ளது.

சிஎன்பி-யின் தகவலுடன், நியூசிலாந்துச் சுங்கத் துறை ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் இரண்டு பொட்டலங்களை இடைமறித்து மொத்தம் 10 கிலோ ஐஸ் போதைப்பொருளைப் பறிமுதல் செய்தது. இதன் மதிப்பு சுமார் 3 மில்லியன் நியூசிலாந்து டாலர் (S$2.3 மில்லியன்).

மே மாதத்தில் தனது நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட பல சரக்குகளில் இருந்து மொத்தம் 40 கிலோ ஐஸ் போதைப்பொருளை ஆஸ்திரேலிய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஆஸ்திரேலிய மத்திய காவல்துறை, ஆஸ்திரேலிய எல்லை காவல் படை ஆகியவற்றின் உளவுத்துறை தகவல் பரிமாற்றத்தைத் தொடர்ந்து இது நடந்தது. இந்த போதைப்பொருள்களின் உள்ளூர் மதிப்பு 37 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் (S$31 மில்லியன்) என்றும் இது 400,000 தனிப்பட்டவர்களின் புழக்கத்துக்குப் போதுமானதாக இருக்கும் என்று அறிக்கை கூறுகிறது.

ஆஸ்திரேலியாவில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்கள் அறைகலன்கள், காப்பி, கடுகு ஆகிய ஏற்றுமதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

மூன்று நாடுகளிலும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதற்கு முன்பு, புருணையின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுத் துறை நவம்பர் 2024 முதல் ஏப்ரல் 2025 வரை ஆறு மாத கால நடவடிக்கையில் மொத்தம் 49 கிலோ ஐஸ்-சைக் கைப்பற்றியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த போதைப்பொருள் மத்திய கிழக்கு, ஐரோப்பா, கிழக்காசியா, ஆஸ்திரிலேசியா ஆகியவற்றுக்கு அனுப்பப்படவிருந்தது.

“பெரிய போக்குவரத்து, தளவாட மையமாகத் திகழும் சிங்கப்பூரின் உள்கட்டமைப்பைப் பயன்படுத்தி, போதைப்பொருள் கும்பல்கள், தங்கள் சட்டவிரோத நடவடிக்கைகளுக்குத் தங்களுக்கான ஒரு பாதுகாப்பான புகலிடமாகவோ அல்லது பாதுகாப்பான பாதையாகவோ நிச்சயமாகக் காண முடியாது,” என்று சிஎன்பி-யின் செயல்பாட்டுத் துணை இயக்குநர் ஆரோன் டாங் அறிக்கையில் கூறியிருந்தார்.

“போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளைக் கண்டறிந்து, சீர்குலைத்து, அகற்றுவதற்கு சிஎன்பி தனது அனைத்துலகப் பங்காளிகளுடன் தொடர்ந்து நெருக்கமாகப் பணியாற்றும்,” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

குறிப்புச் சொற்கள்