போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 30 வயதாகும் வெளிநாட்டு ஆடவர் ஒருவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ஜூன் 12ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு சனிக்கிழமை (ஜூன் 14) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
ஜூன் 10ஆம் தேதி மாலை பெண்டிமியர் சாலைக்கருகே மின்சைக்கிளில் சென்றுகொண்டிருந்த அந்த ஆடவரை அதிகாரிகள் அணுகியதாக அது கூறியது.
அதிகாரிகளைக் கண்டதும் ஆடவர் தன் மின்சைக்கிளைக் கைவிட்டுத் தப்பியோடிவிட்டார். அதிகாரிகள் பின்தொடர்கையில் அவர் காலாங் ஆற்றில் ஒரு பையை வீசிவிட்டு ஓடியதாகக் கூறப்பட்டது.
ஆற்றிலிருந்து மீட்கப்பட்ட அந்தப் பையில் ஏறத்தாழ 2,004 கிராம் கஞ்சாவும் 518 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டது.
போதைப்பொருள்களின் மொத்த மதிப்பு $110,200 என்று கூறப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் அளவு, ஏறக்குறைய 580 போதைப்புழங்கிகள் ஒரு வாரத்துக்குப் பயன்படுத்தப் போதுமானது என்று தெரிவிக்கப்பட்டது.
ஆடவரை அடையாளம் கண்ட அதிகாரிகள், ஜூன் 12ஆம் தேதி பிற்பகலில் கம்போங் யூனூஸ் வட்டாரத்துக்கு அருகே கூட்டுரிமை வீடு ஒன்றின் நுழைவாயிலுக்கு அருகே அவரைக் கைது செய்தனர்.
அந்தக் கூட்டுரிமை வீட்டில் உள்ள ஆடவரின் இருப்பிடத்திலிருந்து போதைப்பொருள் பயன்படுத்தத் தேவைப்படும் துணைக்கருவிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரில், 250 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளையோ 500 கிராமுக்கு அதிகமான கஞ்சாவையோ கடத்திய குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரணதண்டனை விதிக்கப்படலாம்.
கைது செய்யப்பட்ட ஆடவரிடம் விசாரணை தொடர்வதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்தது.