தீவு முழுவதும் போதைப்பொருளுக்கு எதிராக நடத்தப்பட்ட சோதனையில் 112 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு (CNB) தெரிவித்து உள்ளது.
பிடிபட்டவர்களில் ஆக இளையவர் 16 வயதுச் சிறுமி. போதைப்பொருள் புழக்கத்திற்காக அவர் கைது செய்யப்பட்டார்.
சோதனை நடவடிக்கை அக்டோபர் 14 முதல் அக்டோபர் 25 வரை 12 நாள்கள் நீடித்ததாக திங்கட்கிழமை (அக்டோபர் 28) வெளியிடப்பட்ட அறிக்கையில் சிஎன்பி கூறியது.
அங் மோ கியோ, பிடோக், கிளமெண்டி, யூனோஸ், ஜூரோங் மற்றும் தெம்பனிஸ் வட்டாரங்களில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அந்த நடவடிக்கையின்போது $296,000 சந்தை மதிப்புள்ள போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன.
பிடோக் சவுத் அவென்யூ 3ல் உள்ள ஒரு வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 42 வயதுப் பெண்ணும் 44 வயது ஆடவரும் சிக்கினர். அந்த வீட்டில் இருந்து 1.7 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள், 69 கிராம் ஹெராயின், 17 கிராம் கஞ்சா ஆகியன கைப்பற்றப்பட்டன.
மற்றொரு சோதனையில் சிங்கப்பூர் தம்பதியர் பிடிபட்டனர். 55 வயது கணவரும் 37 வயது மனைவியும் கைது செய்யப்பட்டனர்.
அந்தச் சோதனையிலும் பல்வேறு போதைப்பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதிகாரிகள் சோதனை நடத்தியபோது தம்பதியரின் 10 வயது மற்றும் 12 வயதுப் பிள்ளைகளும் அந்த வீட்டில் இருந்தனர். தற்போது அவ்விருவரும் உறவினர்களின் பராமரிப்பில் உள்ளதாக சிஎன்பி தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இரண்டாம் கட்ட சோதனையின்போது 25 வயது ஆடவரும் 31 வயதுப் பெண்ணும் பிடிபட்டனர்.
தங்களது வீட்டுக்குள் நுழையவிடாமல் அதிகாரிகளை அவர்கள் தடுத்தனர். பின்னர் அவ்விருவரும் கைது செய்யப்பட்டனர்.
அந்த வீட்டில் இருந்து சிறிய அளவிலான ஹெராயின் கைப்பற்றப்பட்டது.