சட்டவிரோதக் கடன்கொடுக்கும் நடவடிக்கை: 117 பேரிடம் விசாரணை

சட்டவிரோதக் கடன்கொடுக்கும் நடவடிக்கை: 117 பேரிடம் விசாரணை

2 mins read
95098a39-8b9b-430c-9349-bf4c97311f93
சந்தேக நபர்களில் சிலர் வங்கிக் கனக்குகளைத் திறந்து, தங்களது தானியக்க வங்கி இயந்திர அட்டைகள், தனிப்பட்ட அடையாள எண்கள், இணைய வங்கி அடையாள வில்லைகள் ஆகியவற்றை உரிமமின்றி கடன் கொடுப்போரிடம் வழங்கியதாகச் சந்தேகிக்கப்படுகிறது. - சித்திரிப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் 13க்கும் 74 வயதுக்கும் இடைப்பட்ட மொத்தம் 117 பேர் உரிமமின்றி கடன் கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில் விசாரிக்கப்படுவதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நவம்பர் 14ஆம் தேதிக்கும் 17ஆம் தேதிக்கும் இடையே, நான்கு நாள் சோதனை நடவடிக்கைகள் நடத்தப்பட்டன. குற்றவியல் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளும், காவல்துறையின் இதர ஏழு நிலப் பிரிவு அதிகாரிகளும் தீவுமுழுவதும் அச்சோதனை நடவடிக்கைகளை நடத்தினர்.

பதினாறு பேர் கடன் வாங்கியவர்களின் வீடுகளில் தொல்லை கொடுத்ததாகவும், மேலும் 42 பேர் சட்டவிரோதமாகக் கடன்கொடுக்கும் தொழில்களுக்குத் தானியக்க வங்கி இயந்திரங்கள் மூலம் பணப் பரிமாற்றம் செய்ததாகவும் நம்பப்படுவதாக முதற்கட்ட விசாரணைகள் காட்டின.

எஞ்சிய 59 பேர் வங்கிக் கனக்குகளைத் திறந்து, தங்களது தானியக்க வங்கி இயந்திர அட்டைகள், தனிப்பட்ட அடையாள எண்கள், இணைய வங்கி அடையாள வில்லைகள் ஆகியவற்றை, உரிமமின்றி கடன் கொடுப்போரிடம் வழங்கியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

உரிமமின்றி கடன்கொடுக்கும் தொழிலை நடத்தியதற்கான அல்லது அதற்கு உதவியதற்கான குற்றம் முதன்முறையாக நிரூபிக்கப்பட்டால், ஒருவருக்கு நான்கு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, $30,000 முதல் $300,000 வரை அபராதம், ஆறு பிரம்படிகள் வரை விதிக்கப்படலாம்.

உரிமமின்றி கடன்கொடுப்பவரின் சார்பில் தொல்லை கொடுக்க முயற்சி செய்ததற்கான அல்லது தொல்லை கொடுத்ததற்கான குற்றம் முதன்முறையாக நிரூபிக்கப்பட்டால், ஒருவருக்கு ஐந்தாண்டுகள் வரை சிறைத் தண்டனை, $5,000 முதல் $50,000 வரை அபராதம், மூன்று முதல் ஆறு பிரம்படிகள் வரை விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்