உயிர்பொருளியல் துறையை மேம்படுத்த $118 மில்லியன் நிதி ஒதுக்கீடு

உயிர்பொருளியல் துறையை மேம்படுத்த $118 மில்லியன் நிதி ஒதுக்கீடு

1 of 2
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
படம்: லியான்ஹ சாவ்பாவ்

05 Oct 2026 - 6:33 pm

2 mins read

சிங்கப்பூரில் உயிர்ப்பொருளியல் துறையை மேம்படுத்த ஏறக்குறைய 118 மில்லியன் வெள்ளியை ஒதுக்கப்பட்டுள்ளது.

இயற்கையான முறையில் உயிரினங்களிடமிருந்து நொதிகள் (enzymes), வேதிப்பொருள்கள் போன்றவற்றை தயாரிப்பது இதன் நோக்கம். இவற்றில் சில படிம எரிபொருளுக்கு மாற்றாகப் பயன்படுத்தக் கூடியவை.

இத்தகைய உற்பத்தியில் பெட்ரோலியத்தை அடிப்படையாகக் கொண்ட ‘ஜெட்’ எரிபொருளுக்கு மாற்றாக பயன்படுத்தக்கூடிய நீடித்த விமான எரிபொருளும் ஒன்று.

கச்சா எண்ணெயிலிருந்து தயாரிக்கப்படும் நெகிழிப்பொருள்களுக்கு பதிலாக ஆமணக்கு எண்ணெயிலிருந்து தயாரிக்கப்படும் நெகிழிகள் மாற்றாகப் பயன்படலாம். அதே வேளையில் எரிசக்திக்காக 'பயோமீத்தேன்’ பயன்படுத்துவது படிம அடிப்படையிலான இயற்கை எரிவாயுவின் தேவையைக் குறைக்கும்.

தேசிய பொறியியல் உயிரியல் மையத்தின் தொடக்க நிகழ்ச்சியில் அக்டோபர் 5 அன்று கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, உயிர்ப்பொருளியல் நிதித் திட்டத்தை அறிவித்தார்.

இந்த முயற்சி, பொருளியல் வளர்ச்சிக் கழகம், ஏஸ்டார் ஆகியவற்றால் முன்னெடுக்கப்படுகிறது. இத்தகைய பொருள்கள், வேதிப்பொருள்களுக்கான உலகளாவிய சந்தை 2030ஆம் ஆண்டிற்குள் 200 பில்லியன் அமெரிக்க டாலரைத் தாண்டும் என்ற கணிப்புகளுக்கு மத்தியில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

அரசு நிறுவனங்களின் கூற்றுப்படி, சிங்கப்பூரில் உயிர்பொருளியல் துறையை மேம்படுத்துவதற்காக சிங்கப்பூர் ஒதுக்கியுள்ள மிகப்பெரிய நிதி ஒதுக்கீடு இதுவாகும்.

இந்த முன்னெடுப்பானது, ஏற்கெனவே உள்ள ஏறக்குறைய 82 மில்லியன் டாலர் நிதியுதவியுடன் இணைந்து, அடுத்த ஐந்து ஆண்டுகளில் உயிர்ப்பொருளியல் சார்ந்த திட்டங்களுக்காக மொத்தம் ஏறக்குறைய 200 மில்லியன் டாலர் மதிப்பிலான நிதி ஒதுக்கீட்டிற்குப் பங்களிக்கிறது.

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் பேசிய பொருளியல் வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் ஜெர்மைன் லோய், “உயிர்பொருளியலுக்கான நம்பிக்கையளிக்கும் சூழலுக்கு ஒரு முக்கிய காரணம், புதைபடிவ எரிபொருள்களைச் சார்ந்த மூலப்பொருள்களுக்கு மாற்று பொருள்களைத் தேடுமாறு நிறுவனங்களைத் தூண்டும் விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டதே,” என்று குறிப்பிட்டார்.

வேளாண் பயிர்ப் பாதுகாப்பு, பயனீட்டாளர் பராமரிப்பு போன்ற துறைகளில், தற்போதுள்ள தயாரிப்புகளைவிட சிறந்த முறையில் செயல்படும் பொருள்களைத் தயாரிக்க உயிரியல் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
எரிபொருள்பொருளியல்என்யுஎஸ்டெஸ்மண்ட் லீ