ஆஸ்திரேலியாவில் ராணுவப் பயிற்சியின்போது விபத்து; சிங்கப்பூர் ஆயுதப் படையினர் 12 பேர் காயம்

ஆஸ்திரேலியாவில் ராணுவப் பயிற்சியின்போது விபத்து; சிங்கப்பூர் ஆயுதப் படையினர் 12 பேர் காயம்

1 mins read
4346d7ef-7a70-4d6a-bbec-801b7cf36940
‘எக்சர்சைஸ் வாலபி’ ராணுவப் பயிற்சியில் சிங்கப்பூர் ராணுவத்தின் ஹன்டர் கவச வாகனம். - படம்: த. கவி

ஆஸ்திரேலியாவில் ராணுவப் பயிற்சி மேற்கொண்டபோது நேர்ந்த விபத்தைத் தொடர்ந்து, சிங்கப்பூர் ஆயுதப்படை வீரர்கள் 12 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 24) இரவு 7.40 மணியளவில் குவீன்ஸ்லாந்தின் ஷோல்வாட்டர் பே பகுதியிலுள்ள பயிற்சித்தளத்திற்குத் திரும்பியபோது ஹன்டர் கவச வாகனம் ஒன்று, இன்னொரு வாகனத்தின் பின்புறம் மோதியதாகச் சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சு ஓர் அறிக்கை வாயிலாகத் தெரிவித்தது.

“அவ்விபத்தில் சிங்கப்பூர் ஆயுதப்படை வீரர்கள் 12 பேர் காயமுற்றனர். யாருக்கும் கடுமையான காயமில்லை. அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர் அல்லது தேறி வருகின்றனர்,” என்று அமைச்சு கூறியது.

“நம் படையினரின் பாதுகாப்பும் நல்வாழ்வுமே மிக மிக முக்கியம். விபத்தைத் தொடர்ந்து, வாகனவோட்டிகள் உரிய இடைவெளியைப் பேண வேண்டியதை நினைவூட்டுவதற்காகப் பாதுகாப்பு இடைநிறுத்தத்திற்கு ராணுவம் அழைப்பு விடுத்துள்ளது,” என்றும் அமைச்சு தெரிவித்தது.

காயமடைந்தவர்கள் ராக்ஹேம்டன் விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் அங்கிருந்து ராக்ஹேம்டன் பேஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் குவீன்ஸ்லாந்து அவசர மருத்துவ வாகனச் சேவைப் பேச்சாளர் ஒருவர் ஆஸ்திரேலிய ஊடகத்திடம் கூறினார்.

செப்டம்பர் 8 முதல் நவம்பர் 3 வரை நடைபெறும் ‘எக்சர்சைஸ் வாலபி’ கூட்டு ராணுவப் பயிற்சியில் கிட்டத்தட்ட 6,200 பேர் பங்கேற்கின்றனர்.

சிங்கப்பூர் ராணுவத்தின் ஹன்டர் கவச வாகனம் இப்பயிற்சியில் இடம்பெறுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்