குறைந்த வருமானம் கொண்ட தொழிற்சங்க உறுப்பினர்கள் தங்கள் அன்றாடச் செலவுகளுக்கு உதவும் வகையில் $120 வரை மின்னிலக்கப் பற்றுச்சீட்டுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று என்டியுசி தெரிவித்துள்ளது.
$1.2 மில்லியன் மதிப்பிலான இந்த முயற்சி, 2025 என்டியுசி கேர் (யூ ஸ்ட்ரெட்ச்) திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. இது, அதிகரித்துவரும் பணவீக்க அழுத்தங்களுக்கு மத்தியில் குடும்பங்களுக்கு உதவும் முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.
பல குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு அன்றாடச் செலவுகள் இன்னும் அதிகமாக இருப்பதால், மளிகைப் பொருள்கள், சுகாதாரப் பராமரிப்பு, தினசரி உணவு போன்ற அம்சங்களில் தொழிற்சங்க உறுப்பினர்கள் தங்கள் செலவுகளைச் சமாளிக்க இத்திட்டம் உதவுகிறது என்று என்டியுசி புதன்கிழமை (ஜூலை 30) ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
$1, $2, $5, $10 மதிப்புள்ள மின்பற்றுச்சீட்டுகள், RedeemSG மின்னிலக்கப் பற்றுச்சீட்டு அமைப்பின்கீழ் பெற்றுக்கொள்ளக்கூடியவை.
தொழிற்சங்க உறுப்பினர்கள் தங்கள் மின்பற்றுச்சீட்டுகளை ஃபேர்பிரைஸ் பேரங்காடிகள், யூனிட்டி மருந்துக் கடைகள், கோப்பித்தியாம் உணவு நிலையங்கள் உள்ளிட்ட பங்கேற்கும் வணிகர்களிடம் பயன்படுத்தலாம். இந்தப் பற்றுச்சீட்டுகள் டிசம்பர் 31, 2025 வரை செல்லுபடியாகும்.
இந்தத் திட்டத்திற்கு தகுதிபெற, விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப தேதியில் குறைந்தது ஆறு மாதங்கள் தொடர்ச்சியாக என்டியுசி உறுப்பினராக இருக்க வேண்டும். மேலும், உறுப்பினர் கட்டணங்கள் எதுவும் நிலுவையில் இருக்கக்கூடாது.
ஒரே வீட்டில் வசிக்கும் குடும்ப உறுப்பினர்களைக் கொண்டிராத தொழிற்சங்க உறுப்பினர்கள், அவர்களின் தனிநபர் மொத்த மாத வருமானம் $1,650ஐ (மிகுதிநேர ஊதியம், படித்தொகை உட்பட) தாண்டவில்லை என்றால், $60 மின்பற்றுச்சீட்டுகளுக்கு தகுதிபெறலாம்.
ஒரே வீட்டில் குடும்ப உறுப்பினர்களுடன் வசிப்பவர்கள், அவர்களின் மொத்த மாத குடும்ப வருமானம் $3,800ஐ தாண்டவில்லை என்றால் $120 மின்பற்றுச்சீட்டுகளுக்கு தகுதிபெறலாம். இல்லையெனில், அவர்களின் தனிநபர் வருமானம் $950 அல்லது அதற்குக் குறைவாக இருக்க வேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
இந்தத் திட்டத்திற்கு ஜூலை 30ஆம் தேதி நண்பகல் முதல் செப்டம்பர் 3ஆம் தேதி மாலை 4 மணி வரை விண்ணப்பிக்கலாம்.