மருத்துவத் துறையில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள நேரிடலாம் என்றாலும் அவற்றைக் கண்டு துவண்டுவிடக் கூடாது என டியூக்-என்யுஎஸ் மருத்துவப் பள்ளியின் புதிய பட்டதாரிகளுக்கு சுகாதார அமைச்சரும் சமுதாயக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான ஓங் யி காங் அறிவுறுத்தியுள்ளார்.
டியூக்-என்யுஎஸ் பள்ளியின் 20 ஆண்டு வரலாற்றில் ஆக அதிகமான மாணவர்கள் (121 பேர்) சனிக்கிழமையன்று (மே 31) பட்டம் பெற்றனர்.
அவர்களில் 67 பேர் மருத்துவத் துறையில் நோயாளிப் பராமரிப்புக்கான முனைவர் பட்டம் (Doctor of Medicine/MD) மட்டும் பெற்றனர், 27 பேர் ஆய்வுக்கான பிஎச்டி (PhD) மட்டும் பெற்றனர்; ஐவர் அவ்விரு பட்டங்களையும் பெற்றனர்.
பலரும் சட்டம், மக்கள் தொடர்பு, கணக்காய்வு, மனநல ஆதரவு உள்ளிட்ட துறைகளிலிருந்து மருத்துவத் துறைக்கு மாறியவர்கள்.
அண்மையில் தொடங்கிய ‘நோயாளிப் பாதுகாப்பு, சுகாதாரத் தரம்’ முதுநிலைப் பட்டத்தை முதல் முறையாக 14 பேர் பெற்றுக்கொண்டனர். அது தென்கிழக்காசிய அளவில் தனித்துவமான பட்டமாகும்.
மேலும் எட்டுப் பேர், அனைத்துலக அளவில் ஆய்வுக் கண்டுபிடிப்புகளைச் சிகிச்சைமுறையாக மாற்றுவது தொடர்பான மருத்துவக் கல்வியில் (International Translational medicine) முதுநிலைப் பட்டம் பெற்றனர்.
சனிக்கிழமை பட்டம் பெற்றவர்களில் 58 விழுக்காட்டினர் பெண்கள்.
மருத்துவத் துறையில் நோயாளிப் பராமரிப்புக்கான முனைவர் பட்டம் பெற்றவர்களில் (MD) என்யுஎஸ், சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகம் (எஸ்யுடிடி) ஆகியவற்றுடன் டியூக்-என்யுஎஸ் இணைந்து வழங்கும் நிபந்தனைக்குட்பட்ட மாணவர் சேர்க்கைத் திட்டங்களின் (conditional admissions pathways) முதல் பட்டதாரிகளும் அடங்குவர்.
தொடர்புடைய செய்திகள்
விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் ஓங், “சிங்கப்பூரில் மருத்துவப் பள்ளிகளில் சேர்வது ஆகக் கடினம் என்பதை அனைவரும் நன்கு அறிவர். கல்வி, விளையாட்டுகள், கலைகள், தொண்டூழியம் அனைத்திலும் மருத்துவப் பள்ளி மாணவர்கள் சிறந்து விளங்குவது வழக்கம்.
“அப்படியிருக்கையில், மருத்துவப் பள்ளி மாணவர்களுக்கு, பட்டம் பெற்றபின் தம் எதிர்காலம் பற்றி நியாயமாகவே உயர்ந்த எதிர்பார்ப்புகள் இருக்கும்.
“ஆனால், பள்ளி முடித்து மருத்துவமனைக்குள் அடியெடுத்து வைத்ததும் நீங்கள் அதிர்ச்சியடையலாம். நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம்; இரவில் நெடுநேரம் பணியாற்றவேண்டியிருக்கும், நோயாளிகளும் அவர்களைச் சேர்ந்தவர்களும் உங்களிடம் அதிகம் எதிர்பார்க்கலாம்; சிலர் சிங்கப்பூர் மருத்துவ மன்றத்தில் உங்கள்மீது புகார்கூட அளிக்கலாம்; சம்பளமும் கெளரவமும் ஆக உயர்ந்ததாக இருக்கும் என உறுதியாகச் சொல்ல முடியாது,” என்றார் திரு ஓங்.
எனினும், இச்சவால்களைக் கையாளவும் மருத்துவர்களை ஆதரிக்கவும் சுகாதார அமைச்சும் மருத்துவக் குழுமங்களும் கட்டமைப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளன என்றார் அவர்.
எடுத்துக்காட்டாக, நோயாளி எண்ணிக்கையைச் சமாளிக்க சுகாதார அமைச்சு மனிதவளங்களை விரிவுபடுத்துவதாகவும் இரவு நேரப் பணிகளின் நேரத்தைப் படிப்படியாகக் குறைத்து வருவதாகவும் கூறிய அவர், வசைபாடும் நோயாளிகளோ குடும்ப உறுப்பினர்களோ சகித்துக்கொள்ளப்பட மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டார்.
ஊழியர்களின் நலனைப் பேணச் சுகாதாரக் குழுமங்கள் தலைமை நல அதிகாரிகளையும் (Chief Wellness Officers) நியமித்துள்ளதாகவும் இளம் மருத்துவர்களை ஆதரிக்க மேற்பார்வையாளர்களை ஊக்கப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.
விழாவில் பட்டம் பெற்றவர்கள் மருத்துவ முனைவராவதற்கு நீண்ட பயணம் மேற்கொண்டதையும் சுட்டினார் அமைச்சர் ஓங். “உங்களில் சிலர் மருத்துவம், அறிவியலுக்குத் தொடர்பில்லாத முதல் பட்டம் வைத்திருக்கிறீர்கள். அதனால் இப்பயணம் இன்னும் கடினமானதாக இருந்திருக்கக்கூடும்,” என்றார் அமைச்சர் ஓங்.
ஆனால் கடினமான சூழல்களிலும் அன்பு, நேர்மை, தொழில் தர்மம் ஆகியவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் (என்யுஎஸ்) 120வது ஆண்டு நிறைவு, டியூக்-என்யுஎஸ்சின் 20வது ஆண்டு நிறைவு, டியூக் பல்கலைக்கழகத்தின் 100வது ஆண்டு நிறைவு ஆகியவை ஒன்றாக வருவதையும் அமைச்சர் ஓங் குறிப்பிட்டார்.

