சட்ட நிறுவனமொன்றின் முன்னாள் ஊழியர் ஒருவர் மொத்தம் 122,000 வெள்ளிக்கும் மேலான மதிப்புகொண்ட காசோலைகளைக் களவாடியதை ஒப்புக்கொண்டுள்ளார்.
அந்நிறுவனத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது அவர் அவ்வாறு செய்தார். 45 வயது சுஃபாண்டி அகமது, நம்பிக்கை துரோகம் இழைத்ததாகவும் அதிகாரபூர்வ வீட்டு முத்திரை ஆவணத்துக்குப் பதிலாக போலி ஆவணத்தைப் பயன்படுத்தியதாகவும் தன் மீது சுமத்தப்பட்ட இரு குற்றச்சாட்டுகளைத் திங்கட்கிழமை (டிசம்பர் 1) ஒப்புக்கொண்டார்.
மேல்முறையீட்டுக்குப் பிறகு தற்போது ஒன்பது ஆண்டுச் சிறைத் தண்டனையை நிறைவேற்றிவரும் சுஃபாண்டி, இரண்டு வீடுகளின் விற்பனை தொடர்பில் 5.1 மில்லியன் வெள்ளிக்கும் மேலான கடனை வழங்க ஒரு வங்கியை ஏமாற்றிய கும்பலில் இடம்பெற்றிருந்தார். சம்பந்தப்பட்ட இரு வீடுகளுக்காக வழங்கிய கடனில் அந்த வங்கி 1.79 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான தொகையை இழந்ததாகத் காவல்துறை சென்ற ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
ஏமாற்றியதாக இரு குற்றச்சாட்டுகள், அதிகாரபூர்வ ஆவணங்கள் எனக் கூறி போலி ஆவணங்களைப் பயன்படுத்தியதாக ஐந்து குற்றச்சாட்டுகள் ஆகியவற்றுக்காக சுஃபாண்டிக்கு சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆறரை ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
தற்போதைய வழக்கின் தொடர்பில் அவர், 2004ஆம் ஆண்டிலிருந்து 2012ஆம் ஆண்டு வரை சம்பந்தப்பட்ட சட்ட நிறுவனத்தில், சொத்துப் பரிவர்த்தனை ஆவணங்களைக் கையாளும் பொறுப்பில் இருந்தார்.
2010ஆம் ஆண்டு பிப்ரவரி 18லிருந்து ஆகஸ்ட் ஐந்தாம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் சுஃபாண்டியிடம் அந்த சட்ட நிறுவனத்தின் சேவைகளை நாடிய இரு தரப்பினரின் மூன்று காசோலைகளைக் கையாளும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது. அந்தக் காசோலைகளின் மொத்த மதிப்பு 122,000 வெள்ளிக்கும் அதிகமாகும்.
அந்தத் தொகை, முத்திரை வரி போன்ற செலவுகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், சுஃபாண்டி அந்தக் காசோலைகளைத் தனது சொந்த வங்கிக் கணக்கில் போட்டுக்கொண்டு அதிலிருந்து வந்த தொகையைத் தனது செலவுகளுக்காகப் பயன்படுத்திக்கொண்டார்.
தவற்றை மறைக்க பின்னர் அவர் தனது சொந்த பணத்தையும் சம்பந்தப்பட்ட சட்ட நிறுவனத்தின் பணத்தையும் வீட்டுக் கட்டணங்களைச் செலுத்தப் பயன்படுத்தியிருக்கிறார்.

