இலவச விமானப் பயணச்சீட்டுகள்: விநியோகம் தொடங்கிய ஒரு மணி நேரத்திற்குள் அனைத்தும் பெறப்பட்டன

1 mins read
846497bd-75cc-4dff-9d59-af7d3f85afd1
புதன்கிழமை (மார்ச் 1) ஹாங்காங்கின் சிம் ஷா சுவெய் பகுதியில் புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளும் சுற்றுப்பயணிகள். படம்: புளூம்பெர்க் -

சிங்கப்பூர் பயணிகள் ஹாங்காங் செல்வதற்கு மொத்தம் 12,500 இலவச விமானப் பயணச்சீட்டுகள் விநியோகிக்கப்படும் என்று கேத்தே பசிஃபிக் விமான நிறுவனம் அறிவித்ததைத் தொடர்ந்து, வியாழக்கிழமை (மார்ச் 2) நண்பகல் அவற்றின் விநியோகம் தொடங்கியது.

விநியோகம் தொடங்கிய ஒரு மணி நேரத்திற்குள் அனைத்து விமானச்சீட்டுகளும் பெற்றுக்கொள்ளப்பட்டுவிட்டன. இந்த விமானச்சீட்டுகளின் விநியோகம் ஏழு நாள்கள், அதாவது அடுத்த புதன்கிழமை வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அவற்றைப் பெற்றுக்கொள்ள ஏராளமானோர் ஆர்வம் காட்டியதால், ஒரு மணி நேரத்திற்குள் அனைத்து விமானச்சீட்டுகளும் கொடுத்து முடிக்கப்பட்டுவிட்டன.

வியாழக்கிழமை பிற்பகல் 1.20 மணியளவில் அந்த விமான நிறுவனத்தின் இணையத்தளத்தில், "அனைத்து இலவச விமானப் பயணச்சீட்டுகளும் வழங்கப்பட்டுவிட்டன" என்ற வாசகம் பதிவிடப்பட்டிருந்தது.

விமானச்சீட்டுகள் விநியோகம் தொடங்கிய மூன்றே நிமிடங்களில் 56,549 பயனர்கள் கேத்தே பசிஃபிக் இணையத்தளத்தைப் பயன்படுத்தினர்.