சிங்கப்பூரில் அதிகாரிகள் மேற்கொண்ட 9 நாள் அதிரடிச் சோதனைகளில் கிட்டத்தட்ட 130 பதிவுநீக்கம் செய்யப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அதுபோன்ற வாகனங்களை வைத்திருப்போருக்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும் முயற்சியாகச் சோதனைகள் நடத்தப்பட்டன.
இம்மாதம் 11ஆம் தேதியிலிருந்து 19ஆம் தேதிவரை மேற்கொள்ளப்பட்ட சோதனையில் பதிவுநீக்கம் செய்யப்பட்ட 126 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக நிலப் போக்குவரத்து ஆணையம் அறிக்கை வெளியிட்டது.
இவ்வாண்டு ஜனவரியிலிருந்து அக்டோபர் வரை நடத்தப்பட்ட சோதனைகளில் அத்தகைய 440 வாகனங்கள் சிக்கின.
கடந்த மூவாண்டுகளில் பிடிபட்ட வாகனங்களுடன் ஒப்புநோக்க அது கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகம். கடந்த மூன்று ஆண்டுகளில் ஆண்டுக்குக் கிட்டத்தட்ட 120 பதிவுநீக்கம் செய்யப்பட்ட வாகனங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.
“அத்தகைய குற்றங்கள் அதிகரித்து வருவதும் வாகனங்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் முயற்சிகள் வலுப்படுத்தப்பட்டதும் 2026ஆம் ஆண்டில் அதிகளவிலான பதிவுநீக்கம் செய்யப்பட்ட வாகனங்கள் பிடிபட்டதற்குக் காரணமாகும்,” என்று ஆணையம் சொன்னது.
காவல்துறையுடன் இணைந்து ஆணையம் பதிவுநீக்கம் செய்யப்பட்ட வாகனங்களுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்ளும் என்று குறிப்பிட்டது.
சட்ட அமலாக்கத்தை வலுப்படுத்த சாலையோரக் கண்காணிப்பு கேமராக்கள், ‘ஈஆர்பி 2’ எனும் புதிய செயற்கைக்கோள் அடிப்படையிலான மின்னியல் சாலைக் கட்டண முறை போன்ற தொழில்நுட்பங்களையும் அதிகாரிகள் பயன்படுத்துவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பதிவுநீக்கம் செய்யப்பட்ட வாகனங்களைத் தொடர்ந்து வைத்திருப்பவர்களுக்கும் பயன்படுத்துபவர்களுக்கும் விதிக்கப்படும் தண்டனைகள் பிப்ரவரி 27ஆம் தேதியிலிருந்து கடுமையாக்கப்பட்டுள்ளன.
முதல் முறையாக அத்தகைய குற்றத்தில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக $2,000 அபராதம், மூன்று மாதங்கள்வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுவந்த நிலையில், தற்போது அது $20,000 வரை அபராதம், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் என்று மாற்றப்பட்டுள்ளது.
